பொங்கல் ரிலீஸ் – விலகிய படங்கள் மீண்டும் வருமா…?

2015-pongal-releases2015ம் ஆண்டின் முதல் பண்டிகை நாளான பொங்கல் தினத்தன்று “ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன், காக்கி சட்டை” ஆகிய படங்கள் வெளியாகும் என பத்து நாட்களுக்கு முன் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பொங்கலுக்கு திரைப்படங்களுக்கிடையே நல்ல போட்டி உருவாகும் என்ற நிலைமை இருந்தது. பொங்கல் தினத்தில் ஐந்தாறு படங்கள் வெளிவருவது கடந்த சில வருடங்களாக குறைந்த நிலையில் இந்த வருடம் அந்தக் குறை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

‘ஐ மற்றும் என்னை அறிந்தால்’ படம் கண்டிப்பாக வெளிவந்து விடும் என்பதால் அந்தப் போட்டியில் சிக்க வேண்டமென ‘கொம்பனும், காக்கி சட்டை’ வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் ஆயிரம் திரையரங்குகளில் ‘ஐ’ படம் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டதால்தான் அந்தப் படங்கள் போட்டியிலிருந்து விலகியதாகச் சொல்கிறார்கள்.

தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பும், இறுதிக் கட்டப் பணிகளும் திட்டமிட்டபடி முடிவடையாததால் திடீரென  படத்தின் வெளியீட்டை மாதக் கடைசியில் தள்ளி வைத்து விட்டார்கள்.

‘ஆம்பள’ படத்தை முழுவதுமாக முடித்து திரையரங்குகளின் பட்டியலையும் விஷால் வெளியிட்டு விட்டார். ‘ஐ’ படத்திற்கும் எண்ணற்ற திரையரங்குகள் கிடைத்துள்ளன.

‘என்னை அறிந்தால்’ தள்ளிப் போனாலும், ‘கொம்பன், காக்கி சட்டை’ ஆகிய படங்கள் மீண்டும் பொங்கலன்று வந்து விட முடியுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. இருந்தாலும் இன்னும் 12 நாட்கள் இருப்பதால் நிலைமை மாறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்கிறார்கள்.

பொங்கல் விருந்தில் இருந்து விலகிய படங்கள் மீண்டும் வந்து விடுமா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

Read Previous

‘என்னை அறிந்தால்’ டிரைலர் புதிய சாதனை…

Read Next

V 4 – விருதுகள் 2014…