தமிழ் சினிமாவில் எத்தனையோ தாதா கதைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று உச்சத்தில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் தாதாவாக நடித்த படங்கள் பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்துள்ளன.
கமல்ஹாசனுக்கு ‘நாயகன்‘, ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’, விஜய்க்கு ‘போக்கிரி’, அஜித்துக்கு ‘அமர்க்களம்’ ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் படங்களில் எல்லாம் தாதா கதாபாத்திரம் இளமையான கதாபாத்திரமாகத்தான் இருக்கும்.
ஆனால், 87 வயது தாதா கதாபாத்திரத்தை ஒரு படத்தில் நாயகனாக வைப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் ‘தாதா 87’ படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ-க்கு இருக்கிறது.
‘தாதா 87’ படத்தில் 87 வயது தாதா கதாபாத்திரத்தில் சாருஹாசன் நடித்திருக்கிறார். படத்தின் கதாநாயகனே இவர்தான். இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கிறார். மற்றும் இந்தப் படத்தில் ஆனந்த் பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது திரையிடப்பட்ட பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருந்தன. குறிப்பாக ‘தாதா 87’ ன் புகழ் பாடும் ஒரு பாடலில் தன்னுடைய நடையிலும், முரட்டுப் பார்வையிலும் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சாருஹாசன். இவருடைய வயதும் 87 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளிவர இருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் தாதா படங்களில் பேசப்படும் ஒரு படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.