‘புறம்போக்கு’ அனுபவம் – ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்

‘புறம்போக்கு’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே.ஏகாம்பரம் திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாது ரசிகர்களிடத்திலும் பலமான பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

விஜய் நடித்த ‘தமிழன்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான என்.கே.ஏகாம்பரம் ‘இயற்கை, கள்வனின் காதலி, ஈ, கந்தசாமி, சுறா, காவலன், காவல், புறம்போக்கு” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, ஹிந்தி, மலையாளப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘புறம்போக்கு’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“ஒரு படத்தின் ஒளிப்பதிவு என்பது கதைக்கு உட்பட்டே இருக்க வேண்டும். இந்தப் படத்தில் எப்படி காட்சிகள் அமையப் போகிறது என்பதை எனக்கு படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இயக்குனர் ஜனநாதன் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.‘

படத்திற்காக ஜெயில் செட் போடப்படும் போதும் கலை இயக்குனருடன் கலந்தாலோசித்து ஒளிப்பதிவுக்கு தக்கவாறு கொஞ்சம் வைடாகவே அமைத்துக் கொண்டோம். அதோடு கைதிகள் வெள்ளை நிற உடைகள் அணிந்திருப்பதால் அதற்கேற்றபடி பின்னணியில் ‘கிரே’ கலர் வருவது போல பார்த்துக் கொண்டேன்.

ஷாம் இருக்கும் அலுவலகம் மட்டுமே கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்கும். மற்றபடி படத்தில் காட்டப்பட்டுள்ள சிறைச்சாலையை ஒரு செட் என்று யாருமே நினைக்காத அளவிற்கு கொடுத்திருப்பதாக அனைவரும் பாராட்டுத் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக பனிமலைப் பிரதேசமான குலுமணாலி, ராஜஸ்தான் பாலைவனம் ஆகிய இடங்களிலும் படமாக்கினோம். பனிமலையில் படமாக்கியதுதான் மிகவும் சவாலாக இருந்தது.

கதாபாத்திரங்களின் மேக்கப்புக்கும் அதிக கவனம் எடுத்துக் கொண்டோம். விஜய் சேதுபதியின் முகத்தில் எப்போதுமே ஆயில் இருப்பது போன்றே இருக்கும். ஷாம் மட்டுமே கொஞ்சம் கிளாமராகத் தெரிவார். கார்த்திகாவுக்கு முடிந்த அளவிற்கு மேக்கப்பைக் குறைக்க வேண்டும் என்று முதலிலிலேயே சொல்லிவிட்டேன்.

இந்தப் படத்திற்காக ஒன்றரை வருடங்கள் உழைத்தது இன்று பலமான பாராட்டுக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் வந்த பிறகு பலரும் தங்களை ஒளிப்பதிவாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிலிமில் படமாக்கிய போது இருந்து ஒளிக்கலவை இப்போது டிஐ மூலம் முழுவதும் மாறிவிட்டது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவில் எந்த அளவிற்கு யதார்த்தம் காட்ட முடியுமோ அந்த அளவிற்குக் காட்டியிருக்கிறேன்,” என்கிறார் ஏகாம்பரம்.

Read Previous

ஜெயா டிவி – மே 18 – 24 – திரைப்படங்கள் விவரம்…

Read Next

தமிழ்ப் படங்களில் மட்டும் நடிக்க அஜ்மல் முடிவு…