நடிகர் சூர்யா குடும்பத்தினர் அவர்களது ‘அகரம்’ தொண்டு நிறுவனம் சார்பில் இதுவரை நல்ல மதிப்பெண்களை எடுத்து படிக்க வசதியில்லாத பல மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து அவர்களை மேலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் அடுத்த கட்டமாக தற்போது ‘அகரம்’ சார்பில் ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும் விதமாக 25 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் சுய தொழில் செய்து முன்னேறும் விதத்தில் நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியை நேற்று நடைபெற்ற ‘36 வயதினிலே’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
இப்படி ஒரு உதவியை செய்ய உள்ளோம் என்பதை ‘36 வயதினிலே’ படம் வெளியான சமயத்திலேயே அறிவித்திருந்தார்கள். அதன்படி வந்த பல்வேறு விண்ணப்பங்களை ஆராய்ந்து அதன் பின்னர் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பெண்களை நேரில் வரவழைத்து அந்த உதவியை வழங்கிய நிகழ்ச்சி மிகவும் நெகிழ வைப்பதாக இருந்தது.
கணவனை பறிகொடுத்த பெண்கள், விபத்தில் பாதிக்கப்பட்ட பெண், எப்படியாவது சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பெண்கள், என தங்களது சொந்த முயற்சியில் உயரத் துடிக்கும் பெண்களுக்காக நிதியுதவி வழங்கியது ‘36 வயதினிலே’ படத்தின் கதைக்கும் பொருத்தமான ஒன்று. வெறும் பேச்சோடு மட்டும் நின்று விடாமல் அதை செயலிலும் காட்டியுள்ளார் ‘36 வயதினிலே’ படத்தின் தயாரிப்பாளரான சூர்யா.
நிகழ்ச்சியில் ‘36 வயதினிலே’ பட கதாநாயகி ஜோதிகா, இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், வசனகர்த்தா விஜி, படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
‘36 வயதினிலே’ படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும், சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ், கே.ஈ.ஞானவேல்ராஜா உள்ளிட்ட அனைவரும் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி வெறும் நன்றி அறிவிப்பு, வெற்றியைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் விதமாக வழக்கமான ‘சக்சஸ் மீட்’டாக இல்லாமல் இருந்தது பாராட்டுக்குரியதாக அமைந்தது.