அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘டிமான்ட்டி காலனி’ படம் அனைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்னுமொரு பேய்ப் படமா என யோசித்தவர்கள் கூட இப்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். வித்தியாசமான திரைக்கதை மூலம் உண்மையிலேயே ஒரு ஆங்கில ஹாரர் படத்தைப் பார்த்த திருப்தியிருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்தப் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இந்தப் படம் லாபகரமான படமாக இருக்கும் என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் இந்தப் படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது என்கிறார்கள்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள அருள்நிதிக்கு படத்தில் ஜோடியே கிடையாது, அதாவது படத்தில் நாயகியே கிடையாது. இது ஒன்றே போதும் இந்தப் படத்தின் ‘வித்தியாசமான அணுகுமுறைக்கு’ என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
“அரண்மனை, காஞ்சனா 2” ஆகிய படங்களின் பேய்த்தனமான ஹிட்டுக்குப் பிறகு இந்தப் படத்தையும் வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மற்றுமொரு வெற்றியை சேர்த்துக் கொண்டிருக்கிறது.