“களவாணி, வாகை சூடவா” ஆகிய இரண்டு படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் சற்குணம்.
மூன்றாவதாக வந்த ‘நய்யாண்டி’ கொஞ்சம் தடுமாற வைத்தாலும் அடுத்த மாதம் 7ம் தேதி வெளிவர இருக்கும் ‘சண்டி வீரன்’ படத்தின் மூலம் நிமிர்ந்து நிற்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
படத்தின் பாடல் வெளியீடு நடந்த போதே மீண்டும் ஒரு அழகான கிராமத்துக் காதலை கொடுக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.
சண்டி வீரன் படத்தில் என்ன சிறப்பு என்று கேட்டதற்கு,
“சிங்கபூரில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்கே திரும்பி வரும் அதர்வாவுக்கு ஏற்படும் காதல், மற்றும் ஊரில் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சனையால் அவருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதை தஞ்சாவூர் மண் பின்னணியில் கொடுத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக செழியன் இருக்க வேண்டும் என்று அவருடன் பேசியிருந்தேன். அவர்தான் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் பாலா சாரிடம் சொல்லியிருக்கிறார். அதன் பின் அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், கதை கேட்டு முடித்ததும் இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படமாக இந்தப் படம் இருக்கும்,” என்றார் இயக்குனர் சற்குணம்.
“இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதைக்காகத்தான் காத்திருந்தேன். பாலா சார் அழைத்து படத்தில் நடிக்கச் சொன்னதும் சரி என்று சம்மதித்தேன். இந்தப் படத்தை பாலா சார் தயாரிக்கிறார் என்றது மகிழ்ச்சி. மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்கக் கூப்பிட்டாலும் சந்தோஷமாக நடிப்பேன், அவர் இயக்கத்தில் நடிப்பது என்பது மிகப் பெரும் பயிற்சி,” என்கிறார் அதர்வா.
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் வெளியிடும் ‘சண்டி வீரன்’ ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகிறது.