விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.
கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுவதும் இப்படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறது. இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசுகையில்,
“இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். கணேஷா மிகச் சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். எந்த போலீஸ் கதையிலும் சொல்லப்படாத நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார். 25 காட்சிகளில் கைதட்டல் வாங்கும் மிகப் பெரிய நடிகர் பட்டாளத்தை இந்த படத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். 4 பசங்க மிரட்டியிருக்கிறார்கள். அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இந்த படத்துக்கு நிச்சயம் இருக்கிறது. கடந்த 3 மாத காலமாகவே தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம். அது இந்தப் படத்திற்கும் தொடரும், ” என்றார்.
படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் பேசும் போது,
“கதையை சொல்லும் போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார், அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன், திடீரென மீன் பாடி வண்டி ஓட்டச் சொன்னார். டப்பிங்கில் படத்தைப் பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு புதுசா நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும்,” என்றார்.
படத்தின் இயக்குனர் கணேஷா பேசுகையில்,
“பாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக் கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார்.
ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார். ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர்தான் நல்ல படத்தைக் கொடுப்பார் எனச் சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களைக் கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம்படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனச் சொன்னார். அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது,” என்றார்.
நாயகன் விஜய் ஆண்டனி பேசும் போது,
“தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எல்லா படத்திலும் இயக்குனர்தான் ஹீரோ. இந்தப் படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். என்னுடைய கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்தப் படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன்,” என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.
இந்த சந்திப்பில் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ், நடிகர்கள் சம்பத்ராம், கதிர், நடிகை ஆதிரா, சிந்துஜா, விசுவல் எஃபெக்ட்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்குனர் தஸ்தா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.