‘பிச்சைக்காரன்’ நல்ல சென்டிமென்ட் படம் – ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்து

சினிமாவைப் பொறுத்த வரையில் இன்று முன்னணியில் இருக்கும் பலரும் தங்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றிப் பேச விரும்ப மாட்டார்கள்.

அவற்றை நினைவு படுத்தக் கூடிய யாரையும், அவர்கள் தங்களுக்கு உதவி செய்தவர்களாக இருந்தால் கூட தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கூட அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை தவிர்த்து விடுவார்கள்.

ஆனால், இன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘பிச்சைக்காரன்’ பட இசை வெளியீட்டு விழாவில் நானும் ஒரு காலத்தில் ‘பிச்சைக்காரன்’ போலத்தான் இருந்தேன் என இசையை வெளியிட்டுப் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

“இந்தப் படத்தோட டைட்டிலைப் பத்தி முதல்ல எனக்குத் தெரிஞ்ச போது இந்த டைட்டிலை மாத்தச் சொல்லுங்கன்னு சொல்லியிருந்தேன். அப்புறம் ஒரு விழாவுல படத்தோட இயக்குனர் சசியும் என்கிட்ட வந்து டைட்டிலை மாத்தறன்னு சொன்னாரு. ஆனால், அப்புறம் பார்த்தால் ‘பிச்சைக்காரன்’ன்கறதையே டைட்டிலா வச்சிருக்காங்க.

எனக்கு சசியோட வெற்றி ரொம்ப முக்கியம். இந்தப் படத்தோட டிரைலர் மத்த விஷயங்களைப் பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி. டைட்டில்ங்கறது ஒரு குறியீடுதான், அது சென்டிமென்ட் இல்லங்கறத புரிஞ்சிக்கிட்டேன்.

நான் உதவி இயக்குனரா இருந்து தனியா படம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருந்தேன். அந்த டைம் வந்து ரொம்ப முக்கியமான காலம். ஏன்னா, பேசறதுக்கு ஆள் இருக்க மாட்டாங்க, சாப்பாடு போடறதுக்கு ஆள் இருக்க மாட்டாங்க, பாக்கெட்ல காசு இருக்காது. அந்த சமயத்துல நான் சசியைய சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்தான்.

அப்ப அவர்கிட்ட நான் தனியா படம் பண்ணப் போறதப் பத்தி சொன்னேன். உடனே அவர், “தனியா படம் பண்ணப் போறேன்னு சொல்றீங்க, கையில காசு இருக்காது. ஏதாவது கஷ்டம்னா என்கிட்ட சொல்லுங்க. கேக்கறதுக்கு கூச்சப்பட்டுட்டு பட்டினியா இருந்துடாதீங்கன்னு,” சொன்னாரு.

அவர்  அப்படி சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது, ரொம்ப பலமா இருந்தது. அந்த டைம்ல வந்து நான் இந்த படத்தோட டைட்டில் மாதிரி இருந்தேன், சசியோட மனசு இந்த டைட்டில் மேல இருக்கிற கிரீடம் மாதிரி இருந்துச்சி. அவரோட அந்த மனசுக்காகவே இந்தப் படம் வெற்றியடையணும்னு நினைக்கிறேன்.

சசி இயக்கின ‘சொல்லாமலே’ படம் அந்த சமயத்துல என்ன மாதிரி ஒரு அலைய ஏற்படுத்திச்சின்னு எல்லாருக்கும் தெரியும். அப்பலாம் கோடம்பாக்கத்துல இருக்கிற உதவி இயக்குனர்கள் எல்லாருடைய வாயில இருந்தும் வந்த வார்த்தை சசி, சசி, சசிதான்.

அவர் அடையப் போற இடம் மிகப் பெரிய இடம், வெகு சீக்கிரத்துல அவர் அந்த இடத்தை அடையணும்கறது என்னோட நம்பிக்கை.  அவரோட ஸ்கிரிப்ட்டை ஹிந்தில படம் பண்ணனும்கறது என்னோட நீண்ட நாள் ஆசை. அதுவும் சீக்கிரத்துல நிறைவேறும்னு நம்பிக்கை இருக்கு.

விஜய் ஆன்டனி சாரோட ஸ்கிரிப்ட் செலக்ஷன்லாம் நான் ஆரம்பத்துல இருந்தே பார்த்துட்டு வர்றேன். ஒரு மியூசிக் டைரக்டரு, ஹீரோவா மாறும் போது புரியாம இருந்துச்சி. ஒரு ஆர்வத்தோட பண்றாரு போல இருக்குன்னு நினைச்சேன். ‘நான்’ படம் பார்த்த உடனேயே இவரோட செலக்ஷன் நல்லா இருக்கன்னு தெரிஞ்சுது. தொடர்ந்து அவர் பண்ண படங்களோட ஸ்கிரிப்ட் செலக்ஷன் எல்லாமே நல்லா இருக்கு.

அந்த வகையில் இந்த ‘பிச்சைக்காரன்’ படமும் வெற்றியடையும்கறது என்னோட நம்பிக்கை. இந்தப் படத்தை கேஆர் பிலிம்ஸ் ரிலீஸ் பண்ணப் போறாங்க, புதியவங்கள நான் வரவேற்கிறேன், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும்.

மனித நேயத்துக்கு உதாரணமான டைட்டில் ‘பிச்சைக்காரன்’, நல்ல சென்டிமென்ட் படம் , பெரிய வெற்றியடைய வேண்டுகிறேன்,” என படக் குழுவினரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்திப் பேசினார்.

 

Read Previous

Pichaikkaran – Official Trailer

Read Next

எம்ஜிஆர் வீடு கோயில் போல இருக்க வேண்டும் – சரோஜா தேவி