ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’, அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின.
இரண்டு படங்களில் எந்தப் படம் வசூல் அதிகம் என்பதில் இருவரது ரசிகர்களும் கடும் சண்டை போட்டு வருகிறார்கள்.
ஒரு பக்கம் ‘பேட்ட’ படம் மூன்று நாளில் 100 கோடி வசூலித்துவிட்டது என்றும், மற்றொரு பக்கம் ‘விஸ்வாசம்’ அதே மூன்று நாளில் 100 கோடி வசூலித்துவிட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை எழுந்துள்ளது.
இரு படங்களின் தயாரிப்பாளர்களும் இன்னும் அவர்களது படங்கள் பற்றி எந்த ஒரு வசூல் கணக்கையும் வெளியிடவில்லை. ஆனால், ரசிகர்களே ஒரு கணக்கை வெளியிட்டு வருவது வழக்கம் போல நடந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ , ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் வசூலை விட அதிகம் என அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், ரஜினி ரசிகர்களோ, உலக அளவில் ‘பேட்ட’ படத்தின் வசூல் பல மடங்கு அதிகம் என கொண்டாட்டமாய் இருக்கிறார்கள்.
‘பேட்ட’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து உலக அளவில் 100 கோடியைத் தாண்டியுள்ளது. அதே சமயம் ‘விஸ்வாசம்’ தமிழில் மட்டுமே வெளியாகி தமிழ்நாட்டில் மட்டுமே ‘பேட்ட’ படத்தை விட அதிக வசூலைச் செய்திருப்பது உண்மைதான் என வினியோக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
‘விஸ்வாசம்’ படத்திற்கு தமிழ்நாட்டைத் தவிர, கர்நாடகாவில் சிறப்பான வசூலும், கேரளாவில் சுமாரான வசூலும் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு போட்டிதான் முதன்மையாக கணக்கிட வேண்டும், அப்படிப் பார்த்தால் தன் வசூலால் ரஜினிகாந்த்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார் அஜித் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.