கமல்ஹாசன் நடித்து இதுவரை வெளிவந்துள்ள எத்தனையோ சிறந்த படங்களில் ‘மகாநதி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.
ஒரு குடும்பப் பின்னணி கொண்ட கதையை, உணர்ச்சிக் குவியலுடன் கொடுத்து ஒவ்வொருவரையும் குலுங்கிக் குலுங்கி அழ வைத்து படத்தை ரசிக்க வைத்தார்.
1995ம் ஆண்டு ஜனவரி 14 பொங்கல் தினத்தில் வெளிவந்த ‘மகாநதி’ படத்தை சந்தானபாரதி இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசன், சுகன்யா, மகாநதி ஷோபனா, விஎம்சி ஹனீபா, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நேற்றுடன் இந்தப் படம் 25 வருடங்களை முடித்துள்ளது. தன் மனம் கவர்ந்த ‘மகாநதி’ படத்தைப் பற்றி ‘அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன்” படங்களின் இயக்குனரும் ‘சீதக்காதி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான அருண் வைத்யநாதன் சிலாகித்து எழுதிய முகப்புத்தகப் பதிவு……
“மகாநதி – சிதம்பரத்திற்கு ஓடி சென்று நண்பர்களோடு பார்த்த படம். மீசை முளைத்து விட்ட தருணம், கொஞ்சம் எக்ஸ்ட்டிராவாக தில்லும் திமிரும் அனைத்து நண்பர்களிடமும் ‘பச்’சக்கென் ஒட்டி இருந்த நாட்கள்.
படம் கண் முன்னால் விரிய விரிய….மனசு லேசாக குழைய ஆரம்பித்தது, காவேரி பெரிய மனுஷி ஆன காட்சியில்.. கிருஷ்ணசாமியின் கம்பிகளின் ஊடே கண்கள் பேச,என் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர். ச்சேஎன்ன இது என்று துடைத்தபடியே, பக்கத்திலிருந்த நண்பனைப் பார்த்தால் அவனும் கண்களைத் துடைத்தபடியே காட்சியோடு ஒன்றிப் போயிருந்தான். காவேரியில் ஆரம்பித்து,கல்கத்தாவரை சென்று, படம் மீண்டும் ஒரு மகாநதியின் ஓட்டம் போலவே காவேரியில் முடியும்.
வசனம் என்ற இடத்தில் ரா.கி.ரங்கராஜன் பெயரும் இடம் பெற்றிருக்கும், கமல்ஹாசனோடு. நான் மிகவும் ரசித்த வசனங்கள் நிறைந்த படம்.
‘அவன் என்னவோ ஜெயலலிதா படிச்ச ஸ்கூலு ஜெயலலிதா படிச்ச ஸ்கூலுன்னு சொல்றான்’
‘அப்பா…இப்போலாம் டைகர் வெஜிடேரியன் ஆயிடுச்சுப்பா…தயிர் சாதமே சாப்புடுதுப்பா’
‘வழுக்கி உழுந்துட்டேன்’
‘என் புள்ளை இவ்ளோ நாள் சாப்பிட்டதை நான் சாப்பிட மாட்டேனா?’
‘ஒரு நல்லவனுக்குக் கெடைக்க வேண்டிய அத்தனை மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு கிடைக்குதே அது எப்படி?’
‘அவன் டிமாண்ட்னா நீ தாண்டா சப்ளை!’
படம் முடிந்து வெளியே வரும் போது, என்னை மிகவும் அதிகமாக பாதித்திருந்தது.
‘வந்த கதையிலேயே நடிகர்களை மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் மனங்களை தொட்டிருக்கும் படம் மகாநதி’ என்று இரண்டு வரி எழுதிப் போட, தினகரனில் அதைப் பிரசுரித்து விளம்பரம் செய்திருந்தார்கள்.
படம் வெளியான சமயத்தில், துலுக்காணம், கிருஷ்ணசாமியின் முகத்தில் எச்சில் உமிழ்வது போல் ஒரு காட்சி வர, ரசிகர்கள் படை திரண்டு அந்தக் காட்சியை எடுக்க சொல்லி, கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு முற்றுகையிட்டனர். ‘நான் அந்தக் காட்சியை நீக்கினால், கமல்ஹாசன் எனும் திரைக்கதை ஆசிரியரின் முகத்தில் நீங்கள் எச்சில் உமிழ்வதாய் அர்த்தம்’ என்று சொல்லி, கமல் நீக்க மறுத்து விட்டார்.
பூர்ணம் விஸ்வநாதன், சிறைக்குள் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி …’வாழைப்பழம் சாப்பிட்டா அல்சருக்கு நல்லது’ என்று தொண தொணக்கும் பாத்திரத்தில் பின்னி எடுத்திருப்பார்.
கிருஷ்ணா, காவேரி, பரணி, ஜமுனா…பாத்திரங்கள் அனைத்தின் பெயரிலும் நதிகள் இருக்கும். வில் பணக்கார அதிபரான மோகன் நடராஜன் என்றால், அம்பாய் செயல்படும் ஹனீபாவிற்கு தனுஷ் என்று பெயரிடப்பட்டு ‘துளசி கேட்டியா…ஓ பி எம்…Own Personal Money’ என்று சொல்லி, கிருஷ்ணசாமி பசையான ஆள் என்பதை பூடகமாய் சொல்வார்.
இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் இந்தப் படத்தின் ஆணிவேர். கதை சொல்லும் இசை – ஏன் ஞானி என்பதை நிரூபித்திருப்பார். எம்.எஸ்.பிரபுவின் . பாரதியார் பாடல்கள் – இடைவேளையின் போது கமல் நிற்பது மகாத்மா காந்தியின் சாயலில் இருக்கும் -ஒரு அஹிம்சாவாதி வன்முறையைக் கையில் எடுத்து முடித்த நிமிடம் அது.
அழகான குறியீடுகள் கொண்ட, திரையில் ஒரு நாவல் மகாநதி.
பலரால் இந்தப் படத்தில் வரும் சோகம் தாளவில்லை என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், காவியங்கள் பல சோகத்தை தன்னகத்தே கொண்டு தான் இருந்து வருகின்றன.
தொண்ணூறுகளில் எனது ரசனையை சற்றே உயர்ர்திய படங்களில், மகாநதிக்கு ஒரு பெரும் பங்குண்டு.
படம் வெளியாகி இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்று படித்தேன். நதியாய் ஓடின மகாநதி நினைவுகள்.
– அருண் வைத்யநாதன்
