விஜய் சேதுபதி நடித்து வெளி வரும் படங்கள் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்படும் படங்களாக அமைந்து வருகின்றன.
அதே சமயம் வசூல் ரீதியாக பல கோடிகளை சம்பாதிக்காத படங்களாகவே இருந்தன.
‘நானும் ரௌடிதான்’ படம்தான் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படங்களில் முதல் முறையாக சில பல கோடிகளை வசூலித்த படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வசூலுக்குப் பிறகுதான் விஜய் சேதுபதி கமர்ஷியல் ரீதியான நடிகராகவும் உயர்ந்தார்.
கடந்த மாதம் வெளிவந்த ‘சேதுபதி’ படமும் நல்ல வசூலைப் பெற்று இன்று வெற்றிகரமாக 25வது நாளைக் கடந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காதலும் கடந்து போகும்’ படம் வெளியான நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
முதல் மூன்று நாட்களில் மட்டும் இப்படம் சுமார் 7 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெற்றி விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறது.