‘மெர்சல் – தமிழன்’ சாதனையை முறியடித்த ‘மாரி 2 – ரௌடி’

யு டியூபில் ஒரு படத்தையும், பாடலையும் எப்படி பிரமோஷன் செய்யலாம் என்ற வித்தையை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது இந்திய சினிமாவுக்கே கற்றுக் கொடுத்தவர் தனுஷ்.

அனிருத் இசையில், அவர் எழுதி, பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம்தான் யு டியூப் என்ற வீடியோ வலைதளத்தைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டார்கள்.

திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் அதன் பின்னர்தான் அவர்களது படங்களின் டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தையும் யு டியூபில் வெளியிட ஆரம்பித்தார்கள்.

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல்தான் யு டியூபில் இதுவரையில் அதிகப் பார்வைகளைப் பெற்ற தமிழ்ப் பாடலாக இருந்தது. அந்தப் பாடலுக்கு தற்போது வரை 17 கோடியே 38 லட்சம் பார்வைகள் உள்ளது.

அந்தச் சாதனையை இன்னும் எந்த ஒரு தமிழ்ப் பாடல் வீடியோவும் முறியடிக்கவில்லை.

அதே சமயம், ஒரு பாடலின் முழு வீடியோ என்ற வகையில் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் 9 கோடியே 13 லட்சம் பார்வைகளைப் பெற்று தமிழ்த் திரைப்படப் பாடல் முழு வீடியோக்களில் முதலிடத்தில் இருந்தது.

அதை இப்போது ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ முழு பாடல் வீடியோ முறியடித்துள்ளது. இந்தப் பாடல் இப்போது 9 கோடியே 32 லட்சம் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமல்ல முதன் முதலில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் வீடியோ பாடல் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த சாதனையை 16 நாட்களில் நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியப் பாடல்களில் மிகக் குறுகிய காலத்தில் படைக்கப்பட்ட சாதனை இது.

தமிழ்ப் பாடல் வீடியோக்களைப் பொறுத்தவரையில் முதல் இடங்களை தனுஷ் பாடல்கள்தான் பெற்றுள்ளது.

ஆல்பம் அல்லது மேக்கிங் வீடியோ வகையில் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் முதலிடத்திலும், முழு பாடல் வீடியோ என்ற வகையில் ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ பாடலும் முதலிடத்தில் உள்ளன.

‘ரௌடி பேபி’ பாடல் அடுத்த சில நாட்களுக்குள்ளாக 10 கோடிப் பார்வைகளைக் கடக்கும். அடுத்து அது ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் சாதனையைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read Previous

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் புதிய படம்

Read Next

விஜய் ஆண்டனியை வாழ்த்திய இளையராஜா

Most Popular