கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரித்துள்ள ‘மருது’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசும் போது தனி ஒருவரான திருட்டு விசிடி-யை எதிர்த்துப் பேராடுவேன் என்றார்.
தமிழில் ‘மருது’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ராயுடு’ என்ற பெயரிலும் மே20ம் தேதி இப்படம் வெளியாகிறது.
நான் நடித்த ‘சண்டைக் கோழி’ படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள். அதேபோல இந்த ‘மருது’ படம் என்னை நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு போய் சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்துள்ளார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் இது. ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள RK சுரேஷ், வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தன்னுடைய வேலையினை இந்தப்படத்தில் சிறப்பாக செய்துள்ளார். படத்திலேயே வெள்ளையான ஒரு கதாபாத்திரம் நடிகை ஸ்ரீதிவ்யா தான். நான் அவருடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம், அருமையாக நடித்துள்ளார்.
இயக்குனர் முத்தையா வின் அடுத்த படத்தினை கண்டிப்பாக எங்களது பட நிறுவனம் தான் தயாரிக்கும், கதாநாயகன் யார் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்.
திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன்.
மே 20 ஆம் தேதி ‘மருது’ வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்கி திருட்டு விசிடி-யை ஒழிக்கப் பாடுபடுவேன்.
திருட்டு விசிடி-களை கண்டுபிடித்து அதை யார் எங்கிருந்து வெளியிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன்,” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் முத்தையா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மாரிமுத்து, நடன இயக்குனர் பாபா பாஸ்கர், எடிட்டர் பிரவீன் உள்ளிட்டவர்களும் பேசினார்கள்.