சன்மூன் கம்பெனி தயாரிப்பில் அன்புமதி இயக்கத்தில் வாராஸ்ரீ இசையமைப்பில் ராஜ்கமல், மானஸா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது,
‘சின்ன படம், சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள் . எது சின்ன படம் எது பெரிய படம், வெற்றியை வைத்துதான் அதை நிர்ணயிக்க முடியும்.
கமல் நடித்த ‘அவர்கள்’ படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்று முடிச்சு’ படமும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப் பட்டதுதான்.
நான் இயக்கிய முதல் படமான ‘புரியாத புதிர்’ படம் முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், ‘சேரன் பாண்டியன்’ படம் முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப் பட்டது.
படங்கள் வெற்றி பெறும் போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள். சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள்.
இன்ட்ரஸ்டிங்கா எடுங்க அப்பத் தான் படமும் ஓடும் நீங்களும் ‘பெரிய’ என்கிற இடத்தை அடைய முடியும்,” என்றார்.
இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது
‘இயக்குனர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத் திரையிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் ‘சண்டி குதிரை’ படத்தை எடுத்து முடித்து இசை வெளியீட்டு விழா வரை வந்திருக்கிறர்கள். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த போது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன். கதை நன்றாக இருக்கு, சின்னத் திரை இயக்குனரின் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குனராகவும், நடிகராகவும் நிற்கிறேன். அதனால் வெற்றி உங்கள் அருகில் தான் இருக்கு,” என்றார்.
விழாவில் ரவி மரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு, D.S.R.சுபாஷ் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பிரகாசம், நாயகன் ராஜ்கமல், நாயகி மானஸா, இசையமைப்பாளர் வாராஸ்ரீ, ஒளிப்பதிவாளர் வீரா, பாடகர் பிரசன்னா, இயக்குனர் அன்புமதி ஆகியோர் பேசினர்.