லிங்குசாமி, விஷால் இருவரும் இணைந்த ‘சண்டக்கோழி’ படம் 2005ம் ஆண்டில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
படம் முடிந்ததுமே படத்தின் பட்ஜெட் விவகாரத்தால் இருவருக்குள்ளும் மோதல் எழுந்து இருவரும் பல வருடங்களாக பேசிக் கொள்ளாமலே இருந்தனர்.
சில நண்பர்களின் முயற்சியால் கடந்த வருடம் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இருவரும் உருவாக்க முடிவு செய்தனர்.
அதற்குள்ளாக லிங்குசாமி, தெலுங்கு ஹீரோவான அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்தார். அதனால், கோபமடைந்த விஷால், லிங்குசாமியை மறைமுகமாகத் திட்டி ‘சண்டக்கோழி 2’ கைவிடப்பட்டதாகவும் அறிவித்தார்.
அதோடு, தயாரிப்பாளர் சங்கத்திலும் லிங்குசாமி மீது புகார் தெரிவித்திருந்தார். அதனால் அப்போது திரையுலகத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இப்போது திடீரென இருவரும் மீண்டும் ‘சண்டக்கோழி 2’ படத்தை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
லிங்குசாமி இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க விஷால் நாயகனாக நடிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.