பல மோசமான படங்களுக்கு மத்தியில் தமிழ் சினிமா இன்னமும் தழைத்துக் கொண்டிருக்கிறதென்றால் அதற்கு ‘அப்பா’ போன்ற படங்களும் ஒரு முக்கிய காரணம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வெளியாகி அனைவரது அமோக ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் ‘அப்பா’ படம் கேரளாவில் 25க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.
“சிக்கார், மாஸ்டர்ஸ், திருவம்படி தம்பன், த ஹிட் லிஸ்ட், டி கம்பெனி, தி ரிப்போர்ட்டர்” போன்ற மலையாளப் படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்தவரான சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படம் அங்கு வெளியாவது தமிழ் சினிமாவுக்கு ஒரு பெருமைதான்.
பொதுவாக ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்குத்தான் கேரளாவில் வரவேற்பு அதிகம் இருக்கும். ஆனால், ‘அப்பா’ போன்ற படங்களை அங்கும் நன்றாக ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில் மலையாள வினியோகஸ்தர் ஒருவர் படத்தை வாங்கி கேரளாவில் வெளியிடுகிறார்.
இந்தப் படத்தைப் பற்றி இதற்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகை மஞ்சுவாரியார், இயக்குனர் மேஜர் ரவி, நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் வீடியோ மூலம் பிரபலப்படுத்தியுள்ளனர்.
நல்ல படங்களைத் தயங்காமல் வரவேற்கும் மலையாள ரசிகர்கள் ‘அப்பா’ படத்திற்கும் சிறப்பான வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.