வாழ்க விவசாயி, என்னை வாழ வைக்கும் – அப்புக்குட்டி

பொன்னிமோகன் இயக்கத்தில் ஜெய்கிருஷ் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘வாழ்க விவசாயி’.

இப்படத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்த ரூபிணி, விஜயன், கராத்தே கோபாலன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’.

விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது.

மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி.

படம் பற்றிய அனுபவங்களை அப்புக்குட்டி கூறுகையில்,

“எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது.

நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி’ கதை அமைந்திருக்கிறது.

அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை. நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை.

இயக்குநர் P.L.பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா ? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே. அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார்.

படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார் .

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும்.

நாற்று நடுவது ,களை எடுப்பது, கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும். எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

‘வாழ்க விவசாயி ‘படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

Read Previous

விஜய் ஆண்டனி படத்தில் அல்லு சிரிஷ்

Read Next

ஆக்ஷன் படம் இயக்கத்தான் ஆசை – சுந்தர் .சி

Most Popular