ஒரு இளைஞன், இளைஞியிடம் பேசிக் கொண்டிருந்தாலே அதை ‘கடலை’ போடுவது என கிண்டலடிக்கும் பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தையாகவும் அது மாறிவிட்டது.
கிராமத்தில் நிலத்தில் விளையும் ‘கடலை’ புகழ் பெற்றது என்றால், நகரத்தில் இளம் தலைமுறையினரிடம் ‘கடலை’ புகழ் பெற்றது.
நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சஹாய சுரேஷ்.
வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் எடுக்காமல், இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான கருத்துகளையும் படத்தில் அவர் வைத்துள்ளாராம்.
மகாபா ஆனந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு நகைச்சுவையில் கலக்கியுள்ளாராம். ஜான்விஜய் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்திருக்கிறார். மனோபாலா, தவசி, ராதா, சீமா, சென்னியம்மாள் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’ படத்திற்கு இசையமைக்கும் சாம் C S இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.