உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ‘மேல் நாட்டு மருமகன்’.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்தில் மறைந்த நா.முத்துக்குமார் பாடல் எழுதியிருக்கிறார். அவரை நினைவு கூறும் விதமாக இன்று நடைபெற்ற விழா அரங்கிற்கு ‘நா.முத்துக்குமார் அரங்கம்’ எனப் பெயரிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தனர் ‘மேல்நாட்டு மருமகன்’ குழுவினர்.
நா.முத்துக்குமார் மறைவிற்குப் பின் அவர் பாடல் எழுதிய படத்தின் முதல் இசை வெளியீடு இதுதான்.
நா.முத்துக்குமாருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் எம்எஸ்எஸ் கூறியதாவது,
“மேல்நாட்டு மருமகன்’ செக்ஸ், வன்முறை என்று எதுவும் இல்லாமல் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது..
ராஜ்கமல் – ஆண்ட் ரியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள்.
இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன்.
அதற்கு அவர் முதலில் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன், அவசரம்னா வேறு யாரையாவது எழுதி தரச் சொல்லி வாங்கிக்குங்க, ப்ளீஸ் என்றார். நீங்கதான் எழுதனும்னு வற்புறுத்தினேன். நிலைமையை புரிந்த அவர், என்னை காரில் அழைத்துச் சென்று 33 நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்துவிட்டார் .
ஓடும் காரிலேயே பாட்டெழுதித் தந்த அந்த நட்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக்குழு.
“யாரோ யார் இவளோ…
சந்தோஷத்தின் பேர் இவளா ”
என்று அருவியாய் வந்த அவரது எழுத்தாற்றல் மிகப்பெரியது.
அது மட்டுமல்ல படத்தில் மற்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை கேட்டு, அவர்கள் புதியவர்கள் என்பதையும் அறிந்து மனதார பாராட்டிய அந்த பெருந்தன்மைக்கு இந்த படக்குழு நன்றி சொல்லிக் கொள்கிறது.
எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்து விட்டு நிற்கிறோம்,” என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.