44 வீரர்களுக்கு ‘ஜுலை காற்றில்’ குழு தலா ஒரு லட்சம் உதவி

காவியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், கே.சி. சுந்தரம் இயக்கத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பில், அனந்த்நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், பலோமா மோனப்பா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜுலை காற்றில்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா பேசுகையில்,

“இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களும் நானும் நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலைவாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குனரும் எனது உறவினரே. அதனால் இது எனக்கு குடும்ப விழாவாகத் தெரிகிறது.

ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்னர் நடைபெறும் வளைகாப்பு விழா போன்றது இந்த இசை வெளியீட்டு விழா. பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பிறக்கவேண்டும் என்று வாழ்த்தி ஆசி சொல்வது போல், இந்த படமும் வெளியாகி நல்லதொரு வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக ராசியான கைகளுக்குச் சொந்தக்காரரான கார்த்தியை அழைத்திருக்கிறோம்.

நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கத்தைப் பார்த்த இப்படத்தின் தயாரிப்பாளர், இந்த விழாவில் ஒரு அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டிருக்கிறார். பத்து விவசாயிகளுக்கு தலா 25,000 ரூபாய் நிதி உதவியை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மிகக் குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவிற்கு வருகை தந்த இவ்விருவரையும் நாங்கள் பாக்கியமாகவே கருதுகிறேன்,”என்றார்.

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது,

“அமெரிக்காவில் திரைப்பட இயக்குனருக்கான சங்கத்தின் கட்டிடங்கள் பல அடுக்கு மாடிகளாக இருப்பதைக் நான் கண்டு வியந்திருக்கிறேன். அதேபோல் தற்போது சென்னையில் நடிகர் சங்க கட்டிடம் பல அடுக்குகளாக வளர்ந்து வருவதைக் கண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இதன் பின்னணியில் உழைத்த கார்த்தியைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவரது ராசியான கரங்களால் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றிருக்கிறது. அதனால் இந்த படமும் வெற்றி பெறும்.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொள்ளவில்லை. படத்தின் நாயகன், நாயகிகளும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை இயக்குநர் தான் சொல்ல வேண்டும். ஆனால் அனைவரும் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக மற்றொரு நண்பர் நாராயணன் அவர்கள் இங்கு வந்து இருக்கிறார். நண்பர் நாராயணன் அவர்களின் தந்தையார் மிகப் பெரிய தயாரிப்பாளர். “கை நிறைய காசு, கண்ணா நலமா, தாமரை நெஞ்சம், அனுபவி ராஜா அனுபவி” போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர். எங்களுக்கு சினிமா ஆசையை விதைத்தவர் அவர்.

இயக்குனர் கேசி சுந்தரத்தை சிறிய வயதிலேயே தெரியும். தற்பொழுது ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் மூலம் காதலில் விளையாடியிருக்கிறார். இந்தப் படம் அவரது எண்ணத்தைப் போல வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

படத்தின் இயக்குனர் கேசி சுந்தரம் பேசுகையில்,

“நான்இன்சினியரிங் முடித்துவிட்டு, இயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன். ‘காதல்’ படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் ரசிகன் ஆகிவிட்டேன். இந்தக் கதையை முதலில் அவரிடம் சொல்லி பாடலைக் கேட்டபோது, 5 அற்புதமான மெட்டுகளை அமைத்துக் கொடுத்தார். அவருடைய இசையில் காதல் ஆல்பம் ஹிட், கல்லூரி ஆல்பம் ஹிட், அவர் இசையமைத்தால் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டும் இல்லாமல் ஆல்பமாக ஹிட்டாகும். அதே போல் இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட்டாகும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் டிமல் சேவியர் மும்பையில் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் நாயகிகளான சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் ஆகிய இருவரும் வேறு வேறு படப்பிடிப்புகளில் இருப்பதால் அவர்களும் கலந்து கொள்ள முடியவில்லை. படத்தின் நாயகன் சந்தோஷ் நாக், அவருக்கு உடல் நலம் சரியில்லையா, மனசு சரியில்லையா என்பது தெரியவில்லை. அத்துடன் இந்த விழா மிகக் குறுகிய கால ஏற்பாடாக அமைந்ததால் நிகழ்ந்திருக்கலாம்.

இந்தப் படம் காதல் படம் அல்ல. ஆனால் காதலைப் பற்றிய படம். இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு இந்தியப் படங்களில் முதல் முறை வருகிறது என்று நான் உறுதியாகச் சொல்வேன். முதல் அத்தியாயம் நாயகனின் பார்வையில் இருக்கும். இரண்டாவது அத்தியாயம் முதல் நாயகியின் பார்வையில் அமைந்திருக்கும். மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது நாயகியின் கோணத்தில் அமைந்திருக்கும். ஒரு திரில்லர் பாணியில் ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஊடாக, காதலுடன் சொல்லியிருப்பது ஜூலை காற்றில் படம் மட்டும்தான் என்பதே இதன் தனி சிறப்பு.

கார்த்தி சார், சூர்யா சார் இவர்களெல்லாம் என்னுடைய பால்யகால தோழர்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக படப்பிடிப்பு இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு கார்த்தி வருகை தந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதியிருந்தார். சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று காத்திருந்த போது, அவரது மறைவு செய்தி வெளியானது. அதன் பிறகு பாடலாசிரியர் சௌந்தர் என்பவரின் உதவியுடன் சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு பாடலை வெளியிட்டிருக்கிறோம். அதனால் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியது இந்த படத்திற்காகத்தான் என்பதையும் வருத்தமுடன் பதிவு செய்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பேசுகையில்,

“எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்தத் தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர்ஆர் சந்திரன்.

சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அதன் பின் எனது தாத்தா ‘ரத்தக் கண்ணீர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ‘ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம்’ போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

அதன் பிறகு, ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி, நானே ராஜா, மகாகவி காளிதாஸ்’ போன்ற படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

இசைஞானியின் இசையை கேட்டதற்குப் பிறகு இசையமைப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எத்தனை பாடலுக்கு இசை அமைத்தாலும், அவரைப் போல் இல்லையே என்ற எண்ணம் என்னுள் இப்போதும் இருக்கிறது. ஆனால் இயக்குனர்களுக்கு பிடித்து போவதால் இசையமைப்பாளராகத் தொடர்கிறேன்.

இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இயக்குனர் பெருந்தன்மை மிக்கவர். அவரிடம் யாரும் சண்டையெல்லாம் போட முடியாது. இந்தப் படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,”என்றார்.

விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த நிதியினை உயிர்நீத்த சுப்ரமணியன் சகோதரி சித்ரா, கார்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஜுலைக்காற்றில் படக்குழுவின் சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்

“இந்த படத்தின் இயக்குனர் சுந்தரம் என்னுடைய பால்யகால தோழர். என்னுடைய தந்தையார் சிறிய வயதில் இருக்கும் பொழுது எங்களை அதிகமாக வெளியே அழைத்துச் சென்றதில்லை. அழைத்துச் சென்ற இடம் கொடைக்கானலில் இருக்கும் சுந்தரம் அவர்களின் வீடுதான். அவர்களின் வீட்டுக்கு செல்லும் பொழுது சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் அரவணைப்பு.

இயக்குனர் சுந்தரம், இன்ஜினியரிங் முடித்துவிட்டுதான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். தற்போதெல்லாம் இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவுக்கு வருவது அதிகரித்து விட்டது. ஏனெனில் சினிமா அனைத்து தரப்பினரையும் உள்ளிழுத்து விடுகிறது.

சினிமா ஒரு போராட்ட குணத்தை அனைவருடைய மனதில் விதைத்து விடும். அது பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்ல. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு, இது ஒரு வழி என்பதற்காக அனைவரும் சினிமாவிற்கு வருகிறார்கள். சந்தோஷப்படுவதை பார்ப்பதற்காகவே வருகிறார்கள்.

என்னை திரையுலகில் அடையாளப்படுத்திய பல பாடல்கள் எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரும் இந்தப் படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறார் என்பதால் அவருடைய ஆசீர்வாதமும் இந்த படத்தின் வெற்றிக்கு இருக்கும்.

தற்பொழுது நேர்மையான விஷயங்கள் பேசப்படுவது விட எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுவது தான் ஹைலைட் ஆகிவிட்டது. நாயகன் நாயகி வராத ஜுலைக்காற்றில் என்ற படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட்டார் என்று தான் செய்தி வெளியாகும்.
பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுவது விட, வேறு விஷயங்கள் தான் ஹைலைட்டாக பேசப்படும். இந்த படத்தின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகளுக்காக வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

Read Previous

செல்பி விவகாரம், கார்த்தியின் கண்டிப்பு, கஸ்தூரி சமாளிப்பு

Read Next

‘மக்கள் செல்வி’ யார் தெரியுமா ?