எஸ்.எம்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சைவ கோமாளி’.
சுரேஷ் சீதாராம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துளளார். புதுமுகம் ரஞ்சித் ராஜ்குமார், ரெஹானா நாயகன் நாயகியாக நடிக்க, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த பி.எல்தேனப்பன், கதிரேசன், இயக்குனர்கள் தரணி, பேரரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கானா பாலா, ‘ஆம்புலன்ஸ்’ பற்றி ஒரு அருமையான விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
“நான் எழுதும் பாடல்களில் மக்களுக்கும் ஒரு நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதுகிறேன். இந்தப் படத்தில் ‘ஆம்புலன்ஸ்’ பற்றிய ஒரு விழிப்புணர்வுமிக்க பாடலை எழுதியுள்ளேன்.
நாம் சாலைகளில் போகும் போது ஆம்புலன்ஸ் போனால், அதன் பின்னாலேயே பைக்குகளில் சிலர் வேகமாகச் செல்வார்கள். ஆம்புலன்ஸ் பின்னால் சீக்கிரம் சென்று விடலாம் என நினைப்பார்கள். ஆனால், அப்படிப் போனால் பின்னர் அதே ஆம்புலன்ஸில் அவர்கள் போக வேண்டிய நிலை வந்துவிடும்.
அது மட்டுமல்ல ஆம்புலன்ஸ் காலியாகப் போகிறது என்று தெரிந்தால் அதற்கு வழியும் விடமாட்டார்கள். ஒருவரை அழைத்து வர வேண்டுமென்றால் முதலில் அவரிடத்திற்கு ஆம்புலன்ஸ் காலியகாத்தான் போக வேண்டும்.
தயவு செய்து ஆம்புலன்ஸ் போகும் போது இப்படியெல்லாம் செய்யாதீர்கள்,” என கேட்டுக் கொண்டார்.
படத்தின் பெயர்தான் ‘சைவ கோமாளி’, ஆனால், இசை வெளியீட்டு விழாவில் ‘ஆம்புலன்ஸ்’ பற்றி அருமையாகப் பேசி கைத்தட்டல் வாங்கினார் கானா பாலா.