பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, முனீஸ் காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘மாநகரம்’.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கும் மக்களைப் பற்றிய கதை இந்தப் படம். படத்தின் டிரைலரைப் பார்த்தால் வன்முறை அதிகம் இருக்கும் என்று யோசித்தால், இந்தப் படம் சென்னை மாநகரத்தை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் சந்தீப் பேசியதாவது,
“எல்லோரும் தமிழுக்கு நான் மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் சென்னை பையன் , என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில் தான் உள்ளது. என்னுடைய அம்மா , அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே சென்னையில் தான் இருக்கிறார்கள். நான் வேலை பார்ப்பது தான் ஹைதராபாத்தில்.
நான் சர்வைவலுக்காகத்தான் தெலுங்கில் நடிக்கிறேன். தமிழில் நடிக்கும் போது கதையை தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். இப்போது நான் நடித்துள்ள மாநகரமும் , அடுத்து வரவிருக்கும் மாயவன் போன்ற படங்களும் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் புதுமையான ஒரு படைப்பாக இருக்கும்.
எனக்கு இங்கே உள்ள உண்மையான நண்பர்களில் மிகச் சிறந்த நண்பர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள். மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்ன போது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் தயாரிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். நம்மிடம் பணம் இல்லையே எப்படி தயாரிக்கப் போகிறோம் என்று யோசித்து கொண்டு இருந்த போது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறேன் என்று என்னிடம் கூறினார்.
நான் நேற்று தான் மாநகரம் படத்தை பார்த்தேன். மாநகரம் சென்னையின் பெருமையைப் பற்றி பேசும் படமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும் போது சென்னையைப் பற்றி நீங்கள் அனைவரும் பெருமையாக எண்ணுவீர்கள் என்பது தான் உண்மை,” என்றார் சந்தீப்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது,
“இது வரை மாநகரம் திரைப்படத்தை பார்த்த அனைவரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. படத்தை பார்த்த பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் வெளியிட்ட விமர்சனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அவர் அதை வெளியிட்டதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது,
“இந்தப் படத்தை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் கையெழுத்திட்டோம். சிறிய படங்களைத் தயாரிப்பது என்பது பல சிக்கல்களைக் கொடுக்கும் விஷயம். அதனால்தான் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது. தற்போது படம் பார்க்க இளைஞர்கள்தான் அதிகம் வருகிறார்கள். இந்தப் படமும் சென்னையில் உள்ள இளைஞர்களைப் பற்றிய படம்தான். சிறிய படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவைத் தர வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.
மாநகரம் படம் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.