தமிழ்த் திரையுலகத்தில் அரசியல் கதைப் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. வருடத்திற்கு ஒரு படம் வந்தாலே அதிகம்தான்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ‘எமன்’ படம் ஒரு அதிரடியான அரசியல் படமாக வெளிவந்துள்ளது.
இயக்குனர் ஜீவா சங்கர் ஒரு சாதாரண மனிதனின் அரசியல் வளர்ச்சியை யதார்த்தமாகக் காட்ட முயற்சித்துள்ளார். சூழ்ச்சிகளையும், எதிரிகளையும் கடந்து ஒருவன் அரசியல் எப்படி ஒரு பதவியை அடைகிறான் என்பதை வெட்ட வெளிச்சமாய் கொடுத்திருக்கிறார்.
தாத்தா சங்கிலி முருகனின் மருத்துவச் செலவுக்காக செய்யாத ஒரு குற்றத்தை பணத்துக்காக செய்ததாகச் சொல்லி சிறைக்குச் செல்கிறார் விஜய் ஆண்டனி. அங்கு அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் மாரிமுத்து, ஜெயக்குமார் ஆகியோரைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் மூலம் முன்னாள் எம்.எல்.ஏவான தியாகராஜன் தொடர்பு கிடைக்கிறது. அவருடைய சிபாரிசில் மந்திரியான அருள் சங்கரின் ஆதரவால் ஒரு பாருக்கு முதலாளியாகிறார். அடுத்தடுத்து நடக்கும் சில விஷயங்கள் அவரை அரசியலில் இறங்க வைக்கிறது. சூழ்ச்சியும், வன்மமும் கொண்ட அரசியலில் நுழைந்த அவர் தான் நினைத்ததை சாதித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.
படத்துக்குப் படம் தனக்குப் பொருத்தமான கதைகளை விஜய் ஆண்டனி எப்படி தேர்வு செய்கிறாரோ தெரியவில்லை. இந்தப் படத்தில் தமிழரசன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்திருக்கிறார். அவருடைய குரல்வளம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களை இன்னும் மேன்மைப்படுத்திவிடுகிறது. இந்த ‘எமன்’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்த திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் படமாக இந்தப் படம் இருக்கும்.
அரசியல் படம் என்பதால் பார்த்த முகங்களையே அரசியல் தலைவர்களாகக் காட்டாமல் நமக்கு வேறு அரசியல் முகங்களைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த அரசியல் தலைவர்களில் அதிகப்படியாக கவர்ந்தவர் தியாகராஜன். முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகரன் ஆக முத்திரை பதித்திருக்கிறார். அதிலும் கிளைமாக்சுக்கு முன்பாக விஜய் ஆண்டனியுடன் பேசும் அந்தக் காட்சி அசத்தல் ரகம்.
அமைச்சர் தங்கபாண்டியனாக அருள் சங்கர். இதற்கு முன் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு இந்தப் படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவரும் தன் பதவி உயர்வைக் காப்பாற்றிவிட்டார்.
விஜய் ஆண்டனியின் ஜோடியாக மியா ஜார்ஜ். நடிகை கதாபாத்திரத்தில் சினிமாத்தனமில்லாமல் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
அமைச்சரின் பி.ஏ.வாக சார்லி, விஜய் ஆண்டனியின் தாத்தாவாக சங்கிலி முருகன், நண்பராக சுவாமிநாதன், அரசியல்வாதியாக மாரிமுத்து, ஜெயக்குமார் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
அரசியல் சூழ்ச்சிகளையும், திருப்பங்களையும், வசனங்களையும் அருமையாகப் பதிவு செய்த இயக்குனர், திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்கலாம். சில காட்சிகள் மெதுவாக நகர்வதும், பாடல்களும் படத்திற்கு வேகத் தடையாக அமைந்துள்ளன.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகமாகியுள்ளது. அரசியலுக்கு வந்தால் எப்படிப்பட்ட விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் தாராளமாகப் புரிந்து கொள்ளலாம்.