வையம் மீடியாஸ் வி.பி. விஜி தயாரிப்பில் விக்கி ஆனந்த் இயக்கத்தில் ஜோஹன் இசையமைப்பில் கலையரசன், தன்ஷிகா, மைக் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘உரு’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய தங்களது அனுபவங்களைப் பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் விக்கி ஆனந்த், “உதவி இயக்குனராக இருந்து வாய்ப்பு கேட்டப்போ அதை ஏத்துக்கிட்டு, இன்னைக்கு என்னையும் இயக்குனரா மேடையில நிக்க வச்சிருக்கிற தயாரிப்பாளருக்கு நன்றி.
இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். வழக்கமான திரைப்படங்கள்ல இருந்து விலகி வேறு ஒரு மாதிரியான படமாக இந்தப் படம் இருக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதினேன்.
இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி கலையரசன் ‘உறுமீன்’ படம் முடிச்சிருந்த நேரத்துல அவர் கிட்ட கதை சொன்னேன். வித்தியாசமா யோசிக்சிருக்க, ஒரு நாள் கண்டிப்பா படம் பண்ணுவோம்னு சொன்னாரு. சொன்ன மாதிரியே இந்தப் படத்தைப் பண்ணிக் கொடுத்தாரு.
‘காத்தாடி’ படத்துல நான் உதவி இயக்குனரா பண்ண போது அந்தப் படத்துல ஹீரோயினா நடிச்சவங்க தன்ஷிகா. அந்தப் படத்துல நடிக்கும் போது அடிபட்டு ரத்தம் வந்த போது கூட அடுத்த காட்சிக்கு உடனே நடிக்க வந்தாங்க. இந்த ‘உரு’ படத்துல அவங்களுக்கு முழுக்க முழுக்க அடி விழப் போதுன்னு அப்பவே அவங்கதான் இந்த காரக்டர்னு முடிவு பண்ணேன்.
கலையரசன், தன்ஷிகா இரண்டு பேரையும் படத்துக்காக ரொம்பவே கஷ்டப்படுத்தியிருக்கேன். டிசம்பர் மாதக் குளிர்ல 3 டிகிரி கண்டிஷன்ல கொடைக்கானல்ல ஷுட் பண்ணோம். கடும் குளிர், மழைல எதையும் பார்க்காம நடிச்சிக் கொடுத்தாங்க.
சிகப்பு ரோஜாக்கள், மூடுபனி மாதிரியான படங்கள் வந்து ரொம்ப நாளாச்சி. அதை மனசுல வச்சிக்கிட்டு இந்தப் படம் பண்ணோம்.
‘உரு’ தெரியாத ஒருத்தன் என்ன காரணம்னு தெரியாம குற்றங்கள் செஞ்சிக்கிட்டு போறான். அவனுடைய நியாயம் அவனுக்கு, அதுதான் ‘உரு’,” என்றார் இயக்குனர் விக்கி ஆனந்த்.