ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’.
ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் சேர்த்து கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரியா ரெட்டி பேசும் போது,
“9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ படம் அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ படத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று சொன்னார். படத்திற்காக நீங்க நேரா ஷூட்டிங்குக்கு வாங்க என்றார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கைச் சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வர இன்னும் தாமதம் ஆகியிருக்கும்,” என்றார் நாயகி ஸ்ரியா ரெட்டி.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனராகக் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ராம்,
“எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஒரு படத்தை எடுத்து விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும். ஆனாலும் ஜேஎஸ்கே சதீஷ்குமாருடன் அந்த முரண் நிச்சயம் எங்களில் யாருக்குமே இருக்காது. என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகச் சொல்லி நம்மை சமாதானப்படுத்தி விடுவார். அவர் தயாரிப்பில் நான் இயக்கியுள்ள ‘தரமணி’ படத்துக்கு 14 கட் கொடுத்து ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் கட் வாங்காமல் ‘ஏ’ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரைப் போல ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது. அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்,” என்றார் இயக்குனர் ராம்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார்,
“இயக்குனர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என சொன்னார். அந்தக் கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார். இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரியா ரெட்டியைத் தான். என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருது பட்டியலில் இந்த ‘அண்டாவ காணோம்’ இடம் பிடிக்கும். இயக்குனர் ராமின் ‘தரமணி’ வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும்,” தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார்.
இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.