‘ஈரம், வல்லினம், ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்து நாளை வெளிவர உள்ள படம் ‘குற்றம் 23’.
படத்தின் டிரைலர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் ஒரு ‘மெடிக்கல் த்ரில்லர்’, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள்.
அஜித் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய், அதற்குப் பின் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காமலே இருந்தார்.
‘குற்றம் 23’ படத்தில் நடிக்க மட்டுமே சம்மதித்தார். காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுக்கும் என அருண் விஜய் முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
‘சாட்டை’ படத்திற்குப் பிறகு பல படங்களில் மகிமா நம்பியார் நடித்திருந்தாலும் அவருக்குத் திருப்புமுனையான படமாக எந்தப் படமும் இதுவரை அப்படி அமையவில்லை. இந்தப் படத்திற்குப் பிறகு முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் அவரும் இடம் பெறுவார் என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் கடந்த சில வருடங்கள் ‘மருத்துவக் குற்றங்களை’ மையப்படுத்தி சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்தப் படம் அந்தப் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, ஒரு விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைவரையும் ரசிக்க வைக்கும் என இயக்குனர் தெரிவிக்கிறார்.
குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தவிக்கும் கணவன், மனைவிகள் மட்டுமல்லாது இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியக் கருவை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார்கள்.
‘குற்றம் 23’, ரசிகர்களின் மனதை எந்த அளவிற்கு கொள்ளை அடிக்கும் என்பது நாளை தெரிந்துவிடும்.