மிஸ்டர் பாரத் – அடுத்த நம்பிக்கையான படம்

பார்க்கிங், மகாராஜா, தாய் கிழவி உள்ளிட்ட பல தரமான மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்களை தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மிஸ்டர். பாரத்’.

அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பாரத் நாயகனாக அறிமுகமாகிறார். டபுள் ஆக்குபன்ஸி பட நாயகி சம்யுக்தா விஸ்வந்த் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தராஜ், ஆதித்யா கதிர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக நடிகர்கள் என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெறும் சூழலில், ‘மிஸ்டர். பாரத்’ திரைப்படமும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காரணம், படம் வெளியாவதற்கு முன்பாகவே ரூ.11 கோடி மினிமம் கிராண்டி அடிப்படையில் விநியோக உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த பிறகு, தயாரிப்பாளர் சுதன் கேட்ட தொகைக்கு ஒரு விநியோகஸ்தர் முழு உரிமையையும் வாங்கியிருப்பதால், படம் நிச்சயம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை திரையுலகினரிடம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் நிரஞ்சன் பேசுகையில்,

“கதை முழுக்க ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தியே செல்கிறது. காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன், பெண்களிடம் தன் காதலை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறான். அதே நேரத்தில் பெண்கள் அவரிடம் காதலை தெரிவிக்க முயற்சிக்கும்போது அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

நகைச்சுவை என்றாலும் மற்றவர்களை உடல் ரீதியாக கேலி செய்யாமல், மிக நாகரீகமாகவும் இயல்பாகவும் காட்சிகளை கையாண்டிருக்கிறோம். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த காட்சிகளும் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் படம் இருக்கும். இதற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

நாயகன் பாரத் கூறுகையில்,

“நானும் இயக்குநர் நிரஞ்சனும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். அப்போதே சேர்ந்து குறும்படங்கள் எடுத்திருக்கிறோம். இப்படி ஒரு புதிய வகை கதாபாத்திரம் என்று அவர் சொன்னபோதே எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இப்படி ஒரு படத்தில் நான் ஹீரோவாக அறிமுகமாவது மகிழ்ச்சி. இந்த படத்தில் நானும், இசையமைப்பாளரும், நாயகியும் உட்பட ஆறு பேர் அறிமுகமாகிறோம். எந்த இடத்திலும் தவறான காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய படமாக இருக்கும்” என்றார்.

Read Previous

அருள்வான் – பத்திரிகையாளர் சந்திப்பு

Read Next

தாதா – தி சௌரவ் கங்குலி ஸ்டோரி, முதல் பார்வை வெளியீடு

Most Popular