ஓடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றோடு அவ்வப்போது ஒரே படத்தில் சில பல கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி படங்களும் வருகின்றன.
அந்த விதத்தில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வந்த ‘நவரசா’ ரசிகர்களின் பொறுமையை நிறையவே சோதித்தது. இதற்கு முன்பு வெளிவந்த ‘பாவக் கதைகள், புத்தம் புது காலை’ ஆகிய ஆந்தாலஜி படங்களும் ரசிகர்களைக் கவரவில்லை.
இந்நிலையில் அடுத்த ஆந்தாலஜி படமாக ‘கசடதபற’ என்ற படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்தாலஜி படங்களில் இடம் பெறும் கதைகளை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்குவதுதான் வழக்கம். ஆனால், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், எடிட்டர்களும் மட்டும் ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறாக இருக்கிறார்கள்.
ஆறு வெவ்வேறு கதைகள் என்றாலும், ஒரு புள்ளியில் அவை இணையும்படியான தியரி கொண்ட ஆந்தாலஜி படம் இது.
டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து, இயக்குனர் வெங்கட் பிரபு, அவரது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ள இப்படத்தில் உள்ள மொத்த கதைகளையும் சிம்புதேவன் இயக்கியுள்ளார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.
இப்படத்தில் சுந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசான்ட்ரா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சாந்தனு, பிரேம்ஜி வெங்கட் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்கள்.
இன்று இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
முந்தைய ஆந்தாலஜி பட சோதனைகளை இப்படம் தகர்க்கும் என எதிர்பார்க்கலாம்.