ஆர்கே செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கூகுள் குட்டப்பா’.
கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா மற்றும் பலர் நடிக்க அவர் தயாரித்த ‘தெனாலி’ படத்திற்குப் பிறகு இருபது வருடங்கள் கழித்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.
பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு ஆகியோருடன் பூவையார், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், பவித்ரா லோகேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள் சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன். இவர்கள் இருவருமே கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றியவர்கள். சபரிகிரீசன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் அண்ணன் மகன்.
ஜிப்ரான் இசையமைப்பில் மதன் கார்க்கி, விவேகா, அறிவு பாடல்களை எழுத, ஆர்வி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். சிவா கலை இயக்குனராக அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘கூகுள் குட்டப்பா’.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார்.
இப்படம் பற்றி இயக்குனர்கள் கூறுகையில்,
‘தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தி இருக்கிறோம். ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்,’ என்றனர்.
