ரஜினிகாந்த் இல்லாமல் ‘சந்திரமுகி 2’

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிக்க வித்யாசாகர் இசையமைப்பில், பி.வாசு இயக்கத்தில் 2005ல் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’.

மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி நடிக்க பாசில் இயக்கத்தில் 1993ல் வெளிவந்து வெற்றி பெற்ற படமான ‘மணிச்சித்திரத்தா’ படத்தைத்தான் கன்னடத்தில் விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடிக்க ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி.வாசு. கன்னடத்தில் மிகப் பெரும் சாதனை வசூலைப் பெற்றது இப்படம்.

அதை தமிழில் ரீமேக் செய்து நடிக்க விரும்பினார் ரஜினிகாந்த். பின்னர்தான் பி.வாசு இயக்க ‘சந்திரமுகி’ ஆக வெளிவந்தது. இருந்தாலும் படத்தில் ஜோதிகா, வடிவேலு ஆகியோருக்குத்தான் ரஜினிகாந்தை விடவும் பெரிய பெயர் கிடைத்தது. படம் ஓட அவர்கள்தான் காரணம் என்று கூட அப்போது பலரும் சொன்னார்கள்.

கன்னடத்தில் 2004ல் வெளிவந்த ‘ஆப்தமித்ரா’ படத்தின் இரண்டாம் பாகமாக விஷ்ணுவர்தன் நடிக்க ‘ஆப்தரக்ஷகா’ என்ற பெயரில் பி.வாசு இயக்கத்தில் 2010ல் வெளிவந்தது. இப்படமும் வெற்றி பெற்றது.

‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ரஜினிகாந்தை வைத்து இயக்க பி.வாசு முயற்சித்து வந்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கொரானோ நிதியுதவி பற்றி அறிவித்த ராகவா லாரன்ஸ் ‘சந்திரமுகி 2’ படத்தில் கிடைத்த அட்வான்ஸ் மூலம்தான் 3 கோடி கொரானோ நிதி தருகிறேன் என்று சொன்னதன் மூலம் ‘சந்திரமுகி 2’ பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படத்தை ரஜினிகாந்த் ஆசியுடன் நடிக்கப் போவதாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுளளார். ‘ஆப்தரக்ஷகா’ படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் ‘சந்திரமுகி 2’ உருவாகப் போகிறதா அல்லது வேறு கதையா என்று தெரியவில்லை.

பி.வாசு, ராகவா லாரன்ஸ் கூட்டணி இதற்கு முன் இணைந்த ‘சிவலிங்கா’ படம் பெரிய அளவில் போகவில்லை. ஆனால், அதே ‘சிவலிங்கா’ படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆக ஒடியது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் ‘சந்திரமுகி 2’ படத்தைத் தயாரிக்க உள்ளது. அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் இன்று ‘சந்திரமுகி 2’ பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Read Previous

ரீமிக்ஸ் பாடல் – கோபப்பட்ட ஏஆர் ரகுமான்

Read Next

சந்திக்க முடியவில்லை, தனுஷ் அக்காவின் வருத்தம்