ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுமானவர் பரத். அதற்கடுத்து ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல்’ படத்தின் மூலம் தனிப் பெயர் வாங்கியவர்.
பரத் நடிக்கும் 50வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
திரில்லர் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
’லூசிபர்’, ’மரைக்காயர்’, ’குருப்’ உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான்னி ரபேல் இசையமைக்கிறார். அஜய் மனோஜ் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கசம்பு கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஆர்.பி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.பாலா மற்றும் கெளசல்யா பாலா தயாரிக்கிறார்கள்.