நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் மகேந்திரன்

தமிழ்த் திரையுலகின் சிறந்த 10 இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மகேந்திரன். இன்று கமர்ஷியல் ஹீரோவாக மாற்றப்பட்டுவிட்ட ரஜினிகாந்தை சிறந்த கதாபாத்திரங்களிலும், அவருக்குள் இருந்த நடிப்புத் திறனையும் தன்னுடைய ‘முள்ளும் மலரும், ஜானி’ ஆகிய படங்களில் வெளிக் கொணர்ந்தவர்.

அற்புதமான நடிகரான ரஜினிகாந்தை, போகப் போக மசாலாப் பட நாயகனாக மாற்றிவிட்டார்கள் சில பணம் விரும்பிகள். அந்த ‘முள்ளும் மலரும், ஜானி’ ரஜினிகாந்தை இன்றும் பார்க்க மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்.

அப்படி ரஜினிக்குள் புதைந்து கிடந்த திறமையைக் கொண்டு வந்த மகேந்திரன் இன்று ஒரு நடிகராக அறிமுகமாக உள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடிக்கப் போகிறார். இன்று காலை நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.

இயக்குனர் அட்லீ இந்தப் படத்திற்காக சிறந்த நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து வருகிறார். பிரபு, ராதிகா விஜய்யின் பெற்றோர்களாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேந்திரன் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.

70, 80களின் வெற்றிகரமான இயக்குனரான பாரதிராஜா ‘பாண்டிய நாடு’ படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக வெளிப்பட்டார். அவரைத் தொடர்ந்து இப்போது மகேந்திரனும் நடிக்க வருகிறார். எத்தனையோ இயக்குனர்கள் நடிகர்களாக மாறினாலும் இயக்குனர் மகேந்திரனின் இந்த மாற்றம் ‘சம்திங் ஸ்பெஷல்’தான்.

Read Previous

More looks of ‘KO 2’

Read Next

இன்று நேற்று நாளை – விமர்சனம்