‘மஞ்சள்’ படமே வருக…

டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கணேஷ், சுரேஷ் தயாரிப்பில் சத்ய சரவணா இயக்கும் படம் ‘மஞ்சள்’.

இந்தப் படத்தில் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்ற திரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். சசி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் ராஜ் கபூர், சண்முகராஜன், ஜெயசூர்யா, செந்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து கொண்டிருக்கும் காதலை மிகவும் யதார்த்தத்துடனும், புதிய கதைக்களத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் சத்யசரவணா.
படம் பற்றி அவர் கூறியதாவது,

“லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சரி, லவ் பக்கமே தலை வச்சு படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி, அவங்கள்ல எத்தன பேரு அவங்களோட பையனோ பொண்ணோ லவ் பண்ணுனா லவ்வ புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒன்னு சேத்து வச்சு சந்தோசப்பட்றாங்க…

லவ்வுறங்குற வார்த்தைய கேட்டாலே இன்னும் கொஞ்ச நாள்ல கடவுள் கூட கல்லெடுத்து கண்டிப்பா அடிக்க ஆரம்பிச்சிருவான். ஏன்னா அந்த அளவுக்கு ஒரு காலத்துல இதய பூர்வமா நேசிக்கபட்ட லவ், இன்னைக்கி லவ்வுங்குற பேர்ல நாம அடிக்கிற கூத்தாலா தெருவுல ஓட்ற சாக்கடைய விட கேவலமா மாறிடுச்சுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா வசை பாடிக்கிட்டு இருக்கையில,

அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு புழுதிக் காட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக, கைகளுக்கு எட்டாத கற்பனைகளுடன் திரியும் இருவருடைய அன்பின் உச்சத்தை, இன்று சமூகத்தை மிகக் கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சனையுடன் கலந்து அழகிய கிராம வாசனையுடன் சொல்லும் படம்தான் ‘மஞ்சள்’,” என்கிறார் இயக்குனர்.

மஞ்சள் என பெயரை வைத்து விட்டு ஒரு சாவு வீட்டைத்ன் படத்தின் கதைக்களமாக வைத்திருக்கிறார்களாம். இதற்கு முன்னும் இப்படி சில படங்கள் வந்திருக்கிறதே என்று கேட்டால், அந்தப் படங்களிலிருந்து இந்த ‘மஞ்சள்’ முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார்.

செல்வ நம்பி இசையில் படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் கிடைப்பதற்கு முன்பே டியூன் போட்டு வைத்துவிட்டாராம் இயக்குனர். அந்தப் பாடல்களைக் கேட்டதும் தயாரிப்பாளரும் உடனே வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

‘மஞ்சள்’ படமே வருக, என இப்படி யதார்த்தமான படங்களை நோக்கி ரசிகர்கள் திரும்பும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை…

Read Previous

நிஜ வாழ்க்கையில் சிகரெட் பிடிக்க மாட்டேன் – தனுஷ்

Read Next

VSOP single on July 21st…