தொடர் வெற்றிகளுக்கு நன்றி சொன்ன விஷ்ணு விஷால்

‘ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை’ ஆகிய மூன்று படங்களை தொடர் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக நேற்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விஷ்ணு விஷால்.

தன்னை முதன் முதலில் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் ஆனந்த் சக்கரவர்த்தி ஆகியோருக்கு நன்றியுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார்.

“சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த எனக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ஐந்து வருடங்கள் ஆயிற்று. அப்போதெல்லாம் எனக்கு நடிப்பிலும் மிகுந்த ஆர்வமில்லை. ஆனால், ‘நீர்ப் பறவை’ படத்தில் நடித்த பிறகுதான் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும், என ஒரு உத்வேகம் ஏற்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் அந்தப் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.

அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளையும், படங்களையும் நான் தேர்வு செய்து நடிப்பதில் எனக்கு மிகவும் பக்க பலமாக இருப்பவர் இயக்குனர் சுசீந்திரன். மீண்டும் ‘ஜீவா’ படத்தின் மூலம் எனக்கு நல்ல ஒரு வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்தை நண்பர்கள் விஷால், ஆர்யா ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள்.

இடையில் சில காலம் வாய்ப்பு இல்லாமல் இருந்த போது விக்ராந்தை அடிக்கடி சந்திப்பேன். அவர்தான் எனக்கு மிகுந்த தைரியம் கொடுப்பார், கிரிக்கெட்டில் யார் அதிக ரன்கள் அடிப்பது என நாங்கள் போட்டி போட்டாலும், என்னுடைய நெருங்கிய நண்பராகிவிட்டார்.

என்னை வைத்து தொடர்ந்து படங்களை எடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார் மற்றும் எனக்கு கை உடைந்த பிறகும் எனக்காக காத்திருந்த ‘நீர்ப் பறவை’ படத்தைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

அடுத்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் சேர்ந்து நடிப்பதில் எந்த பாகுபாடும் இருந்ததில்லை.

தற்போது சுசீந்திரன் கதையில் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறேன். புதிதாக சில கதைகளைக் கேட்டு வருகிறேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி,” என நீண்ட உரையாற்றினார் விஷ்ணு விஷால்.

அதன் பின் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிறந்த நாள் கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

Read Previous

நன்றி மறக்காத சிவகார்த்திகேயன்…

Read Next

Celebration time for Maari crew