‘சக்சஸ்’ நோக்கி ‘சகலகலா வல்லவன்’…

ஜெயம்ரவி , த்ரிஷா,அஞ்சலி, சூரி ,பிரபு ,ராதாரவி நடித்திருக்கும் படம் ‘சகல கலா வல்லவன்’. இதற்குமுன்பு ‘அப்பாடக்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் பெயர் மாற்றப்பட்டது.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 27 வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஜெயம்ரவி பேசும் போது ” இந்த ‘சகல கலா வல்லவன்’ என்கிற தலைப்புக்கு நான் அருகதையானவனா என்று தெரியாது. ஆனால் அந்த ‘சகலகலா வல்லவன்’ வேறு, இந்த ‘சகலகலா வல்லவன்’ வேறு. ‘அப்பாடக்கர்’ என்றால் அனைத்தும் கற்றவன் என்று அர்த்தம் வந்ததால் இந்த தலைப்பை வைத்தோம். இந்த லட்சுமி மூவி மேக்கர்ஸுக்கு ‘தாஸ்’ படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம்.

அடிப்படையில் இயக்குநர் சுராஜை எனக்குப் பிடிக்கும் அவரது காமெடிக்கு நான் ரசிகன். எப்போதும் நான் சீரியாஸாகத்தான் கதை கேட்பேன் என்று என்னைப் பற்றிச் சொல்வார்கள். இந்தக் கதையை சுராஜ் சொன்ன போது சிரித்துக் கொண்டே கேட்டேன்.

படப்பிடிப்பில் த்ரிஷாவிடம் நான் பேசினாலே கேமரா மேன் செந்தில்குமாருக்குப் பிடிக்காது. உடனே ஷாட் ரெடி என்று அழைப்பார். காரணம் பொறாமையல்ல, அந்த அளவுக்கு வேகமாக எடுப்பார்.

சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. தினேஷ் மாஸ்டரின் பையன் ஹரி தான் மாஸ்டர். முதலில் நம்பிக்கை வரவில்லை எடுத்ததும் அசத்தலாக வந்திருக்கிறது.

த்ரிஷாவுடன் இது எனக்கு மூன்றாவது படம். த்ரிஷாவை அவ்வளவு பிடிக்குமா, தொடர்ந்து நடிக்கிறீர்களே என்று பலரும் கேட்பார்கள். ஆமாம் த்ரிஷாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதிலென்ன தப்பு? த்ரிஷா எனக்கு நல்ல நண்பர். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவு எனக்குப் பிடிக்கும்

த்ரிஷாவும் நானும் பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வருகிறோம். இந்தப் படத்தில் அவர் தமிழில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்துள்ளார். இதில் நடிக்கும் இன்னொரு நடிகை அஞ்சலிக்கும் நல்ல கேரக்டர்தான்.

அஞ்சலி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை சிபாரிசு செய்தது நான்தான். மற்றவர்கள் 10 படத்தில் கமர்ஷியலாக நடித்தால் ஒரு படத்தில்தான் சோதனை முயற்சியாக நடிப்பார்கள். அஞ்சலி 10 படத்தில் சோதனை முயற்சியாக நடித்தால், ஒரு படத்தில் மட்டும்தான் கமர்ஷியலாக நடிப்பவர். பிரபு சார் என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி, இந்தப் படத்தில் அவர் என் அப்பாவாக நடித்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேல் சூரி மிகவும் நன்றாக நடித்துள்ளார். அவர் அடுத்த காமெடி சூப்பர் ஸ்டார் ஆகி விடுவார் என்றே நினைக்கிறேன். .

விவேக் சார் ஈகோ பார்க்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’க்குப் பிறகு அவருடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளேன்.

இந்தப் படத்தை வெறும் காமெடி படம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஒரு நல்ல கதையில் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்பார்கள் போலிருக்கிறது.

இன்றைக்கு திருமண அமைப்பு மீது ஊசலாட்டம் இருக்கிறது, அவ நம்பிக்கை நிலவுகிறது, அதற்கு இந்தப் படத்தில் நல்ல பதில் சொல்லப்பட்டுள்ளது. நான் முழுப்படமும் காமெடியாக நடித்துள்ள இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்,” என ஜெயம்ரவி பேசினார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் பேசும் போது ‘சகலகலா வல்லவன்’ படத் தலைப்பைக் கேட்டதுமே கொடுத்த ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் சுராஜ் பேசும்போது

“எனக்கு காமெடிதான் வரும், இடையில் காதல்கதை எடுத்தேன் தோல்வி அடைந்தேன், ஆக்ஷன் படம் எடுத்தேன், அதுவும் தோல்வியடைந்தது. இனி நமக்குத் தெரிந்ததை மட்டுமே செய்வோம் என்று மீண்டும் காமெடிப் படம் இயக்கி இருக்கிறேன்,” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகைகள்த த்ரிஷா, அஞ்சலி, ஒளிப்பதிவாளர் யு,.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர்கள் எம்.கோகுல் கிருஷ்ணன், டி.எஸ்.ரங்கராஜன், வி.சுவாமிநாதன், மாஸ்டர் தளபதி தினேஷ், ஹரி, எடிட்டர் ஆர்.கே.செல்வா, பாடலாசிரியர் அண்ணாமலை ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களையும், டிரைலரயும் பார்க்கும் போது ‘சகலகலா வல்லவன்’ படத்தின் சக்சஸ் உறுதி என்பது மட்டும் தெரிந்தது.

‘சகலகலா வல்லவன்’ இந்த வாரம் 31ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Read Previous

Radhika Apte in Rajini film

Read Next

Sakalakalavallavan – Appatakkar – Bulbu Vaangittaen Machan – Song