இளையராஜா கோபம் நியாயமானதா ?

ஒரு ‘பீப் சாங்’ வந்தாலும் வந்தது, எத்தனை விதங்களில் சர்ச்சை உருவாகி வருகிறது.

வெள்ள நிவாரணத்திற்காக பணியாற்றிய தன்னார்வ நிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் இன்று காலை சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ஒரு தொலைக்காட்சி நிருபர் இளையராஜாவிடம் ‘பீப் சாங்’ பற்றி ஒரு கேள்வி எழுப்ப, அந்த நிருபரிடம் ‘அறிவு இருக்கிறதா,’ என இளையராஜா கோபத்துடன் எதிர் கேள்வி எழுப்பியது பத்திரிகையாளர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பொது நிகழ்ச்சியில் நிருபர்களைச் சந்திக்கும் போது, இதைத்தான் கேட்க வேண்டும், அதைத்தான் கேட்க வேண்டும் யாரும் நிர்பந்தப்படுத்துவது கிடையாது. பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என்று முடிவெடுத்தால் அவர்கள் பல விஷயங்களைப் பற்றிக் கேட்கத்தான் செய்வார்கள்.

இன்று சமூகத்தையே கோப்படுத்தியுள்ள ஒரு பாடலைப் பற்றி இளையராஜா கருத்து தெரிவித்திருந்தால் அது இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவும் இருந்திருக்கும்.

இளையராஜா போன்றவர்களை எளிதில் அணுகி அவரது கருத்தை அவ்வளவு சுலபத்தில் எந்தப் பத்திரிகையாளரும் கேட்டுவிட முடியாது.

அவர் வந்த இடத்தில் இப்படிக் கேட்கலாமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இளையராஜாவிற்கு அதற்கு பதிலளிக்க விருப்பமில்லை என்றால் ‘நோ கமெண்ட்ஸ்’ என்றோ, ‘பதிலளிக்க விருப்பமில்லை’ என்றோ சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

அதை விட்டு விட்டு, “அறிவிருக்கிறதா, உனக்கு அறிவிருக்கிறது என்றால் எந்த அடிப்படையில் கண்டுபிடிக்கிறாய், ஏய்” என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது அந்த செய்தியாளருக்கு எவ்வளவு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கேள்வி கேட்டார் என்ற ஒரு காரணத்திற்காக அந்தப் பத்திரிகையாளரை அப்படி அவமானப்படுத்துவது சரியா ?.

பெரிய மனிதர்களுக்கு அழகே பொறுமைதான், அதிலும் இளையராஜா போன்ற இசை மேதைகளுக்கு அந்தப் பொறுமை இல்லாமல் போனது ஆச்சரியமான ஒன்றுதான்…

பாவம் கேள்வி கேட்ட அந்த செய்தியாளர், எத்தனை பேர் இந்த வீடியோவைப் பார்த்திருப்பார்களோ…இன்று இரவு அவரால் நிம்மதியாகத் தூங்கத்தான் முடியுமா…?

Read Previous

Irudhi Suttru – Trailer

Read Next

Imman Annachi turns hero