பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா டகுபட்டி, பாபி சிம்ஹா, பார்வதி, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பெங்களூர் நாட்கள்’.
மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு வெளிவந்த ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
தமிழில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் ஒரிஜனல் படமான ‘பொம்மரிலு’ படத்தை இயக்கிய பாஸ்கர், ‘பெங்களூர் நாட்கள்’ படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.
“தமிழ்ல வந்து படம் பண்றது எனக்கு நீண்ட நாட்களாக தள்ளிக் கொண்டே போனது. தெலுங்குல தொடர்ந்து படம் பண்ணிட்டிருந்ததால இங்க படம் பண்ண முடியலை. வாழ்க்கை இங்க இருந்து அது எப்படி என்னை ஆந்திராவுக்கு கொண்டு போச்சின்னே தெரியலை. தமிழ்ல இந்தப் படம் மூலமா வர்றது ரொம்ப சந்தோஷம். படம் இயக்குங்கன்னு பிவிபி சினிமாஸ் சொன்ன உடனேயே சரின்னு சொல்லிட்டேன்.
ஒரு மூணு கசின்ஸப் பத்தின கதை. எத்தனையோ நண்பர்களைப் பத்தின கதையைப் பார்த்திருக்கோம். ஆனால், கசின்ஸ்களோட வாழ்க்கையைப் பத்தின அடையாளமா இந்தப் படம் இருந்தது. அழகான இளம் நட்சத்திரங்களோட இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம். ஒரு நல்ல படத்தோட தமிழுக்கு வர்றதுக்கு சந்தோஷப்படறேன்,” என்றார் பாஸ்கர்.
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், ஹைதராபாத் செல்ல விமானத்தைப் பிடிப்பதற்காக வேகமாகப் புறப்பட்ட ஒரு கேள்வி அவரை அப்படியே நிறுத்தியது.
“ஆர்யா பேசும் போது இந்தப் படத்தில் நீங்க ரொம்பவே ஃபீல் பண்ணி நடிச்சதா சொன்னாரே, அப்படின்னா உங்களுக்கும் த்ரிஷாவுக்கும் என்ன உறவு” என்ற கேள்விதான் அது.
புறப்பட்ட வேகத்தில் திரும்பிய ராணா , “மேடையில இருக்கிற பார்வதி, ஸ்ரீதிவ்யா பத்தி கேளுங்க, த்ரிஷாவைப் பத்தி ஆர்யா கிட்ட கேளுங்க,” என்றார்.
ஆர்யா உடனே, “தங்கச்சி” என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தார். அந்தப் பதிலில் மகிழ்ந்து சிரித்துக் கொண்டே செல்ல முயன்றார் ராணா.
தொடர்ந்து பேசிய ஆர்யா ‘‘எனக்குத் தங்கச்சி” என்று முற்றுப்புள்ளி வைத்தார். மீண்டும் சிரித்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறினார் ராணா.
பரபரப்பான ஒரு பதிலை ராணாவிடமிருந்து எதிர்பார்த்த பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்…
ஆனாலும், ராணாவின் சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது உண்மை…