தமிழ்த் திரையுலகத்தை விட்டு சிறிது காலம் விலகி ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
ஏற்கெனவே பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘சில சமயங்களில்’ படத்தை தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் பேனரில் பிரபுதேவா வெளியிட உள்ளார்.
அடுத்து அவருடைய நேரடித் தயாரிப்பாக ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடிக்கும் ‘போகன்’ படத்தைத் தயாரிக்க உள்ளார்.
கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜுலியட்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் லட்சுமண், ஜெயம் ரவி, ஹன்சிகா மீண்டும் இளையும் படம் இது.
அந்தப் படத்தில் இடம் பெற்ற மற்ற கூட்டணியான “ வி.டி.வி.கணேஷ், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப்சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் ‘போகன்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
‘தனி ஒருவன்’ படத்தின் சூப்பர் ஹிட் கூட்டணியான ஜெயம்ரவி – அரவிந்த்சாமி கூட்டணியும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ம் தேதி பெரம்பூர் பின்னி மில்லில் துவங்குகிறது. அதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் சூப்பர் ஹிட் பாடலான டண்டணக்கா வரிகளுடன் ‘போகன்’ படத்தில் ‘டமால் டுமீல்’ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.
சென்னையில் தொடர்ந்து 20 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது.