‘குற்றப்பரம்பரை’ என்ற ஒரு படத்தை இயக்கும் விவகாரத்தில் இயக்குனர்கள் பாரதிராஜாவும், பாலாவும் எடுக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
எழுத்தாளல் வேல ராமமூர்த்தி கடந்த வாரம் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியைத் தொடர்ந்து பாரதிராஜா திடீரென ‘குற்றப்பரம்பரை’ படத்தின் பூஜையை அவசரமாக செய்து முடித்தார்.
நேற்று பாரதிராஜா இயக்க உள்ள ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையாசிரியரான ரத்னகுமார் அதே வார இதழுக்கு அளித்த ஒரு பேட்டியைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது.
அதைத் தொடர்ந்து இயக்குனர் பாலா நேற்று மாலை திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது விளக்கத்தை அளித்தார்.
இதுவரை பாலா நடத்திய பத்திரிகையளார் சந்திப்புகளில் அவர் அதிகமாகப் பேசியது இல்லை. பத்திரிகையளார்களின் கேள்விகளுக்கு மட்டும்தான் அவர் பதில் அளிப்பார்.
ஆனால், நேற்று அவர் நீண்ட நேரம் தன்னுடைய விளக்கத்தை அளித்துப் பேசினார். அந்தப் பேச்சில் ஆவேசமும், கோபமும் அதிகமாகவே எதிரொலித்தது.
அவருடைய பேச்சின் முழு விவரம், கீழே….
“ஒரு தன்னிலை விளக்கத்துக்காக உங்களை நான் சந்திக்கலை. காயப்பட்டிருக்கிறேன், நடந்த உண்மைகளை உங்கள் மூலமா சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இந்த பூமிக்கு இந்தப் பிரச்சனை எந்த விதத்துலயும் பயன்படப் போறது கிடையாது.
‘குற்றப்பரம்பரை’ நாவல் வேல ராமமூர்த்தி என்பவரால் எழுதப்பட்டது. அதுக்கும் முன்னாடி பாரதிராஜா அதைப் படமாக்கப் போறாருங்கறது எனக்கும் தெரியும். அதுக்கு முன்னாடி நான் வேலராமமூர்த்தியை சந்திச்சதே இல்லை. அந்த நாவலைப் படிச்சதும் எனக்கு ‘இம்ப்ரஸ் ஆச்சி. அதுல இருந்து சில விஷயங்களை எடுத்து படமா பண்ணலாம்னு தோணுச்சு. அப்புறம் அவரைக் கூப்பிட்டு இது எப்ப எழுதினது, பாரதிராஜா சார் வேற சொல்லிட்டிருக்காரு அப்படின்னு கேட்டேன். இது நான் வந்து ‘கூட்டாஞ்சோறு’ங்கற பேர்ல இந்தப் படம் எடுக்கணும்னு நினைக்கிறதுக்கு முன்னாடியே எழுதிட்டேன் சார், அப்படின்னாரு. அதுக்கப்புறம் அவரை சந்திச்சீங்களான்னு கேட்டேன். சந்திச்சேன் சார், வேலா உன் கைக்கு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு, உன் விரல்களுக்கு மோதிரம் அணியணும் போல இருக்குன்னு சொன்னாரு சார், அதுதான் எனக்கும் அவருக்குமான தொடர்புன்னு சொன்னாரு. இது நானும் வேல ராமமூர்த்தியும் சந்திச்சிக்கிட்ட விஷயம்.
‘குற்றப் பரம்பரை’ங்கறது முதல்ல கதை இல்லை, அது நடந்த உண்மைச் சம்பவம். நான் கதை எழுதினேன், நான் கதை எழுதினேன்னு சொல்லி யாருமே உரிமை கொண்டாட முடியாது. இது வரலாறு, இந்த வரலாறை நான்தான் படம் பிடிப்பேன்னு அடம் பிடிக்கிறது சிறுபிள்ளைத் தனமான விஷயம். வரலாறை யார் வேணால் எடுக்கலாம், நான் எடுக்கலாம், நீங்க எடுக்கலாம், யார் வேணா எடுக்கலாம்.
திடீர்னு ஒரு நாள் பாரதிராஜா சார் போன் பண்ணாரு, என்ன நீ ‘குற்றப்பரம்பரை’யை படமா எடுக்கிறியாமேன்னு கேட்டாரு. வேல ராமமூர்த்தி நாவல் ஒண்ணை படிச்சேன், அதை எடுக்கலாம்னு இருக்கேன், ஆனால் ‘குற்றப்பரம்பரை’ கிடையாது சார்னு சொன்னேன். நீ என்ன வேணா படம் எடு, ஆனால், குற்றப்பரம்பரைன்னு டைட்டில் வைக்காத அது என் கனவுப் படம்னு சொன்னாரு. நான் உங்க டைட்டிலை வைக்கலைன்னு சொல்லி விட்டுட்டேன்.
ஒரு பத்திரிகையில பேட்டி கொடுக்கிறாரு, ‘பாலா என் எச்சிலைத் திங்க மாட்டான்னு’ சொல்லியிருந்தாரு. இது என்ன வார்த்தை ?. ரொம்ப எரிச்சலடைந்தேன். வயசு ஏற ஏற எல்லாருமே குழந்தையா மாறிடுவாங்க விட்டுடங்கன்னு விட்டுட்டேன். அதுக்கடுத்து, அந்த வரலாறை தான் எழுதினதா சொல்லிட்டிருக்கானே ஒருத்தன், அந்தக் கதை என்னோடது, என்னோட ரத்தமும், சதையும், அந்தக் கதையை பாலா எடுத்தால் நான் கேஸ் போடுவேன்னு சொல்றான். ஒரு வரலாறைப் படமெடுக்க எனக்குதான் உரிமை இருக்குன்னு எந்த முட்டாப் பயலாவது சொல்வானா .
ஜாலியன் வாலாபாக் படு கொலையை நான் மட்டும்தான் படமெடுக்க முடியும்னு சொல்ல முடியுமா. மருதநாயகம் படத்தை நான் மட்டும்தான் எடுக்க முடியும்னு கமல் சார் சொல்ல முடியுமா. வரலாறை யார் வேணா எடுக்கலாம். அது கூடத் தெரியலை, அவர் ஒரு பேராசியராம். அந்த மாணவர்களை நினைச்சால் எனக்கு பரிதாபமா இருக்கு.
இதுக்கிடையில படத்துக்கு அவர் பூஜை போடறாருன்னு சொன்னாங்க. என்னைக் கூப்பிடட்டும் நான் வரன்னு சொன்னேன். இரண்டு பேரும் ஒரே விஷயத்தைப் பிடிச்சி தொங்கிட்டிருக்கோம்னு நினைச்சிட்டிருக்காங்க, இந்தப் பிரச்சனை இதோட முடியும்னு நினைச்சேன். நான் எழுதி வச்சிருக்கிறது வேற, அவர் எடுத்து வச்சிருக்கிறது வேற. கவனமா கேட்டுக்கங்க, நாங்க ரெண்டு பேரும் எழுதி வச்சிருக்கிறது வேற, அவர் எடுத்து வச்சிருக்கிறது வேற. இது கதை, அது வரலாறு, ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.
‘பிதாமகன்’ சமயத்துல இந்த ரத்னகுமார் என்னை சந்திச்சி இந்த ‘குற்றப்பரம்பரை’ கதையை நீங்கதான படமா எடுக்கணும், பாரதிராஜாவுக்கு இதை எடுக்கத் தெரியாது. நான் பாரதிராஜாவுக்கு இனி கதை, வசனம் எழுத மாட்டேன்னு பேனாவை தரையில குத்திட்டன்னு சொன்னான். இப்படிப்பட்ட ஒருத்தன் பாரதிராஜா பின்னாடி நின்னுக்கிட்டு என்ன வேணால் பேசுவான், நான் அதை கேட்டுக்கிட்டிருக்கணுமா. இதை இவர் அனுமதிப்பாரா, நான் இதுவரைக்கும் நாலு தடவை மன்னிச்சேன், இனி மன்னிக்க மாட்டேன்.
சரி, இதுக்கு மேலயும் இந்தப் பிரச்சனையை வளர்க்க வேண்டாம்னு காலையில அவருக்கு போன் பண்ணேன், அவர் எடுக்கவேயில்லை. மூணாவது முறையா போனை எடுத்து, மூணாவது முறையா போன் பன்றான்டான்னு எடுத்துட்டு கட் பண்றாரு. எதைப் பேசணும்னாலும் நேரடியா பேசிட வேண்டியதுதானே, எதுக்குப் பயப்படணும்.
விக்ரமன் சாருக்கு போன் பண்ணேன், செல்வமணி சாருக்கு போன் பண்ணேன், நான் இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தன்னா என்னை ‘மழுமட்டை’ன்னு சொல்லிடுவாங்க. நான் அப்படி இல்லைங்கறதை உணர்த்தணும்கறதுக்காகத்தான் இங்க வந்தேன்.
இந்த சந்திப்பு வந்து இந்தத் தகவலை சொல்றதுக்காக ஒண்ணு, இன்னொண்ணு எச்சரிக்கிறேன், ரெண்டு பேரையுமே. எதற்கெடுத்தாலும், நான் அந்த மண்ணு, நான் அந்த இனம், அந்த புழுதியில புரண்டவன், நான்தான் எடுக்கணும், எனக்குத்தான் உரிமை, எடுங்க நான் வேண்டாம்னு சொல்லலையே, என்னை எதுக்கு குத்தறீங்க. ‘குற்றப் பரம்பரை’யை நான் எடுக்கப் போறேன்னு சொன்னனா ?. அந்த எச்சரிக்கைன்னு சொல்றத கடைசி வார்த்தையா சொல்லி முடிச்சிக்கிறேன்.
இதுதான் ரெண்டு பேருக்கும் கடைசி எச்சரிக்கை, இனி ஒரு தடவை என்னைப் பத்தி வாயைத் திறந்தால், அது எனக்கு நல்லதோ இல்லையோ, அது உங்களுக்கு நல்லது இல்லை,” என ஆவேசத்துடன் கூறி முடித்தார்.