நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய புதிய நடிகர் சங்க நிர்வாகக் குழு பொறுப்பேற்றதில் இருந்து நடிகர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் பல நல்ல உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
விஷால், சூர்யா, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா போன்ற ஒரு சிலர் தாராள மனதுடன் பல நன்கொடைகளை அளித்தும், நலத்திட்ட உதவிகளையும் செய்கிறார்கள். இப்போது அந்த நல்ல உள்ளங்கள் வரிசையில் ‘மெட்ரோ’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் சிரிஷ் இணைந்திருக்கிறார்.
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 80 வயதைக் கடந்தவர்களுக்கு, ஒரு வருஷத்துக்கான பென்ஷன் வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சிரிஷ்.
தன்னுடைய முதல் படமான ‘மெட்ரோ’வுக்கு வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காகக் கொடுத்துள்ளார். இந்த ஐடியாவை அவரிடம் சொன்னதே நடிகர் சங்க செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும்தானாம்.
‘நல்ல ஐடியாவே இருக்கே…’ என்று வியந்த சிரிஷ், உடனடியாக அதைச் செயல்படுத்தியும் இருக்கிறார். அத்துடன், அடுத்த இரண்டு வருடங்களுக்கான பென்ஷன் தொகையையும் தானே தருவதாக விஷாலிடமும், கார்த்தியிடமும் உறுதி அளித்திருக்கிறார்.
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, உதவி செய்யும் அவருடைய நல்ல குணத்தை நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.