சிம்புவை இன்றைய இளம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம்.
அந்தப் படத்தை இயக்கிய கௌதம் மேனன் மீண்டும் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை முடிக்கும் நிலையில் உள்ளார்.
ஆனால், படத்தில் உள்ள ‘தள்ளிப் போகாதே…’ பாடலைப் படமாக்க முடியாமல் தவித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தப் பாடலைப் படமாக்க முடியாமல் படப்பிடிப்பு பாடல் வரிகள் போல தள்ளிக் கொண்டே போகிறது.
பாடலைப் படமாக்க துருக்கி சென்ற குழுவினர் தமிழுக்கான பாடலைப் படமாக்க முடியாமல், தெலுங்குப் பாடலை மட்டுமே படமாக்கிவிட்டுத் திரும்பியுள்ளனர். சொன்னபடி ஷுட்டிங்கிற்கு வராமல் படக்குழுவினரைத் தவிக்க விட்டுள்ளார் சிம்பு.
சென்னையில் படமாக்கலாம் என்று பின்னர் சொன்ன சிம்பு இதுவரை படப்பிடிப்புக்கே வரவில்லையாம். அந்தப் பாடலைப் படமாக்குவது சிம்பு கையில்தான் உள்ளது. அவர் வரவில்லை என்றால் அந்தப் பாடல் இல்லாமல் படம் வெளியாகும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் புலம்பித் தள்ளியிருக்கிறார் படத்தின் இயக்குனரான கௌதம் மேனன்.
நான் இதற்கு மேல் ஏதாவது சொன்னால், சிம்புவைப் பாராட்டி இதற்கு முன் பேசியது அனைத்தும் பொய்யாகிவிடும். அதனால், மேற்கொண்டு பேச விரும்பவில்லை என்று பெருந்தன்மையாகப் பேட்டி அளித்துள்ளார்.
திருப்புமுனை கொடுத்த இயக்குனரையே திணறடிக்கும் சிம்பு குறித்துதான் தற்போது தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பான பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.