தமிழ்த் திரையுலகத்தில் அரசியல் கூட்டணிகள் போல அவ்வப்போது திடீர் திடீரென புதுப்புது கூட்டணிகள் உருவாகும். சில கூட்டணிகள் வெற்றி பெறும் சில கூட்டணிகள் ‘மக்கள் நல’ கூட்டணியாகிவிடும்.
செல்வராகவன் – சந்தானம் கூட்டணி ‘மக்கள் நல’ கூட்டணியாகப் போகிறதா அல்லது மக்களை ரசிக்க வைக்கும் கூட்டணியாகப் போகிறதா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
நேற்று மாலை செல்வராகவனும், சந்தானமும் தனித் தனியே தங்களின் கூட்டணியைப் பற்றி அறிவித்தது இப்போது வரை யாராலும் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. செல்வராகவன் – சிம்பு கூட்டணி ‘கான்’ படத்தில் இணைந்த போது ஆச்சரியம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்தக் கூட்டணி கைவிடப்பட்டது. ‘கான்’ படம் கைவிடப்பட்ட நிலையில் செல்வராகவனுடன் சந்தானம் சேர்ந்திருப்பது புரியாத புதிராகவே உள்ளது.
சிம்புவால் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சந்தானம். இப்போது சந்தானத்துடன் செல்வராகவன் கூட்டணி அமைத்திருப்பது மீண்டும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷால் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். இப்போது தனுஷின் அண்ணன் செல்வராகவன் சந்தானத்தை தன் பட ஹீரோவாக்கியிருப்பது யாரை வளர்த்துக் கொள்வதற்கு என்பதுதான் பலரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.