வெற்றிமாறனின் கிராஸ்ரூட் கம்பெனி தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்க துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இப்படத்தில் தனுஷ் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருடைய ஜோடியாக த்ரிஷா, ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்கிறார்.
அவர் இந்தப் படத்தில் நடிக்க வந்ததைப் பற்றி இயக்குனர் துரை செந்தில் குமார் கூறியதாவது,
“இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரன் இப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல அரசியல் படங்களை இயக்கிய அவர் இந்தப் படத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கதையைச் சொன்னேன்.
கதையைக் கேட்டவர் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்றார். தானே இயக்கும் படத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் உள்ளேன், அதனால்தான் நடிக்க முடியாது என்று சொன்னேன் என்றார். நானும் சரி என்று வந்துவிட்டேன்.
அதன் பின் தொடர்பு கொண்டு இப்படத்தில் நடிக்கிறேன் என்றார். முதலில் என்னுடைய இயக்கத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியவர். வீட்டிற்குச் சென்று இப்படத்தைப் பற்றி அவரது மனைவி ஷோபா மேடமிடம் கதையைச் சொல்லியுள்ளார். தனுஷ் படத்தில் நடிப்பது மிகப் பெரிய வாய்ப்பு, அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம், நம் வீட்டில் அனைவரும் தனுஷின் ரசிகர்கள், நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் எனக் கூறினார்.
நான் எப்போது கதை எழுதினாலும் என்னுடைய மனதில் தனுஷ் சார் தான் வருவார். அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்களை நான் இயக்கிவிட்டேன். இப்படத்தை அவரை வைத்து இயக்கியுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் இயக்குனர் துரை செந்தில்குமார்.
‘கொடி’ படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.