சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து தமிழில் வெளிவந்த ‘ரெமோ’ திரைப்படம் தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தெலுங்கில் அதே பெயரில் டப்பிங் செய்து இந்த மாதம் வெளியிடுகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பார் ஆர்.டி.ராஜா, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், தெலுங்கில் வெளியிடும் தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் ‘ரெமோ’ படத்தின் டிரைலர், பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டனர். இந்த விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். “இந்த நிறுவனத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதும் மிக்க மகிழ்ச்சி” என சமந்தா தெரிவித்தார். விரைவில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன் தமிழில் நடித்த எந்த ஒரு படமும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானதில்லை. ‘ரெமோ’ படம்தான் முதல் முறையாக தெலுங்கில் வெளியாகிறது.