ஒரு புதிய படம் வெளிவரும் அன்றே சில இணையதளங்களில் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
படம் வெளிவரும் தேதியில் இந்த நேரத்தில் படங்களை எங்களது இணையத்தில் வெளியிடுகிறோம் என்று சொல்லிவிட்டு படங்களை வெளியிடுகிறார்கள்.
‘கபாலி’ படம் வெளிவந்த போது அப்படிப்பட்ட இணையதளங்களைத் தடுக்கும் வேலைகளில் தயாரிப்பாளர் தாணு இறங்கினார். அதன் பின் திரையுலகத்தில் யாரும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் இறங்கவில்லை.
இப்போது, சூர்யா நடித்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘சி 3’ படத்தை அடுத்த வாரம் வெளியாகும் தினத்தன்றே வெளியிடப் போவதாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளம் அறிவிப்பே வெளியிட்டிருக்கிறது என இன்று நடைபெற்ற ‘எமன்’ திரைப்பட விழாவில் ‘சி 3’ படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா கொந்தளித்துப் பேசினார்.
கடும் கெட்ட வார்த்தையால் அந்த இணையதளத்தைத் திட்டிய அவர், அடுத்த ஆறு மாதங்களில் அந்த இணையதளத்தை இல்லாமல் செய்துவிடுவேன் எனக் கோபமாகப் பேசினார்.
ஞானவேல்ராஜாவிற்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளமும் பதிலளித்திருக்கிறது. ‘சி 3’ வெளியாகும் தினம் உங்கள் தினம் அல்ல, எங்கள் தினம்’ என்று கூறியிருக்கிறார்கள்.
ஒரு படத்தைத் தியேட்டருக்கு வரும் தினத்திலேயே வெளியிடுவோம் என சம்பந்தப்பட்ட இணையதளம் அறிவித்திருப்பது திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சி 3’ படம் காவல்துறை சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சி 3’ தயாரிப்பாளர் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என திரையுலகத்தினர் காத்திருக்கின்றனர்.