500 கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றி இந்தியத் திரையுலகின் எல்லைகளை விரிவடைய வைத்துள்ளது. எத்தனை கோடி செலவு செய்து எடுத்தாலும், தரமாக எடுத்தால் அந்தப் படத்தை ரசிக்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதை இந்தப் படம் புரிய வைத்துள்ளது.

‘பாகுபலி’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகே பலரும் சரித்திரப் படங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழில் சுந்தர் .சி இயக்க ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையல் ‘சங்கமித்ரா’ படம் சுமார் 300 கோடி செலவில் தயாராக திட்டமிடப்பட்டு அடுத்த வாரம் கேன்ஸ் விழாவில் படம் ஆரம்பமாக உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட ‘ரண்டமூழம்’ நாவல் சுமார் 1000 கோடி செலவில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் ‘ராமாயணம்’ படத்தை 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் உறவினரான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ஹிந்தித் தயாரிப்பாளர்களான மது மன்டெனா, நமீத் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

‘மகாபாரதம், ராமாயணம்’ ஆகிய இதிகாசங்கள் இதற்கு முன் டிவி தொடர்களாக வெளிவந்துள்ளன. அந்த இதிகாசங்களின் சில கதாபாத்திரங்களை மட்டுமே மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், முழுமையான படங்களாக உருவாகப் போவது இதுவே முதல் முறை.

Read Previous

Vivegam Official Teaser

Read Next

யூ டியூபை அதிர வைத்த ‘விவேகம்’ டீசர்