‘ஃபெப்ஸி’ ஸ்டிரைக், வளரும் விவகாரம்…

தமிழ்த் திரைப்பட உலகத்தில் தற்போது பல பிரச்சனைகள் சுழன்று அடித்துக் கொண்டிருக்கின்றன.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்கெனவே டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. கேளிக்கை வரி விதிப்பின் முடிவு என்னவென்று தெரியவில்லை.

வாரத்திற்கு ஐந்து படங்கள் வெளிவந்தால் அதில் ஒரு படத்திற்கு மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது.

மக்களும் தண்ணீர் பிரச்சனை, தக்காளி விலை உயர்வு என பல பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கும் சினிமாவிற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் குறைவாகவே உள்ளது.

இந்த சூழ்நிலையில் திரையுலகத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊழியர்கள் அடங்கிய ஃபெப்ஸி சங்கத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பிரச்சனை நடந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் அவர்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் வைத்து படத்தை எடுத்துக் கொள்ளலாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஃபெப்ஸி தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. யாரை வேண்டுமானாலும் வைத்து படத்தை எடுக்கும் முடிவை தயாரிப்பாளர் சங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டனர். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

நேற்று ஃபெப்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு, பெப்ஸி தொழிலாளர்களோ வேலை செய்ய மாட்டோம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஃபெப்ஸியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை. அவர்களுடன் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பிற்கு இடையூறு விளைவித்தால் சட்டப்பட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலரது படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாளை முதல் வேலை நிறுத்தம் நடக்குமா, அதற்கு தயாரிப்பாளர் சங்கம் எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கும் என்பது குறித்து திரையுலகத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஃபெப்ஸி வேலை நிறுத்தம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு இப்போதுதான் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

Read Previous

‘சோலோ’ – 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள்

Read Next

சிம்புவின் அடுத்த படம் தரும் அதிர்ச்சி