பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கத்தில், அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘நிபுணன்’.
அர்ஜுனின் 150வது படமாக வெளிவந்த இந்தப் படம் பரபரப்பான, விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இருப்பதாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களின் வரவேற்புடன் விமர்சகர்களின் வரவேற்பும் இந்தப் படத்திற்கு கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.
285 காட்சிகளாக ஆரம்பமான இப்படத்திற்கு திங்கட் கிழமையான இன்று மேலும் 30 காட்சிகள் கூடுதலாக திரையிடும் அளவிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் குமாருடன் அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘மங்காத்தா’ படத்தில் அர்ஜுனுக்கும் அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதே அளவு வரவேற்பு இப்போது நிபுணன் படத்திற்கும் கிடைத்துள்ளது.
பிரசன்னா, வரலட்சுமி ஆகியோரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தும் ஒரு மாறுபட்ட படத்தைக் கொடுக்க உதவியுள்ளது.
படத்திற்குக் கிடைத்துள்ள உண்மையான வரவேற்பால் படக் குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.