‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்ககாரன்’ படத்தின் மூலம் கமர்ஷியல் வெற்றி கொடுக்கும் நாயகனாக மாறியவர் விஷ்ணு விஷால்.
தற்போது ‘கதாநாயகன்’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு கலகலப்பான படத்தைக் கொடுக்கத் தயாராகி வருகிறார்.
விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்னு விஷால் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கதாநாயகன்’.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, மரகத நாணயம்’ போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த முருகானந்தம் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் விஷ்னு விஷால் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். மற்றும் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஷான் ரோல்டன் இசையமைக்க, ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் ஒளிப்பதிவாளரான லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசுகையில்,
“விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், முயற்சியும் உள்ளது. இது அவரை கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். படத்தின் இயக்குனர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு 1பேமிலி எண்டர்டெய்னராக இருக்கும்,” என்றார்.
நடிகர் ஆனந்த் ராஜ் பேசுகையில், “இப்படத்தில் முதன் முறையாக ‘ஷேக்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குனர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார். கதாநாயகன் படம் வெற்றிபெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குனர் முருகானந்தம் பேசும் போது, “விஷ்னு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமால், ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழு எப்போதும் நகைச்சுவையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான விஷ்னு விஷால் பேசுகையில், “ சினிமாவில் நடிப்பதற்கு “வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் நல்ல பெயரைப் பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன. எனினும் முயற்சியை கைவிட வில்லை. கடைசியாக என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு பத்திரிகையாளர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. தற்போது அதே மாதிரியான ஒரு தரமான படமாக கதாநாயகன் படம் வந்துள்ளது. அனைவரையும் இந்தப் படம் நன்றாக ரசிக்க வைக்கும்,” என்றார்.