விஜய் அறிக்கை, அஜித் அறிக்கை – வித்தியாசம் என்ன ?

சமூக வலைத்தளங்கள், சண்டை வலைத்தளங்களாகத்தான் அதிகம் இருக்கின்றன. அவற்றில் கணக்கு வைத்திருப்பவர்களில் பலர் அவற்றை நல்ல தகவல் பரிமாற்றங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், நடிகர்களின் ரசிகர்கள் அவற்றை சண்டையிட்டுக் கொள்ளத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்தில் இன்றைய தலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களைத் தங்கள் பக்கம் வைத்திருக்கும் விஜய், அஜித் ஆகியோரது ரசிகர்கள் அவர்களது அபிமான நடிகர்களின் படங்கள் வந்தால் சமூக வலைத்தளங்களை சூடாக்கி விடுவார்கள்.

அந்த சண்டைகள் பற்றி விஜய், அஜித் இருவருக்கும் தெரிந்திருந்தாலும் இதுவரை அது பற்றி எந்தவிதமான கருத்துக்களைத் தெரிவிக்காமல், அவர்களது ரசிகர்களை கட்டுப்படுத்தாமல் இருந்தார்கள்.

ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குள் விஜய், அஜித் இருவரும் அவர்கள் சார்பாக அறிக்கை வெளியிட்டு அவர்களது ரசிகர்களுக்கு அவர்களது நிலையைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்கள்.

பெண் பத்திரிகையாளர் ஒருவரை விஜய் ரசிகர்கள் தரக் குறைவாக விமர்சித்த பிரச்சனையில் கடந்த 9ம் தேதி விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விஜய் வெளியிட்ட அறிக்கையில், “

“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று அறிக்கையில் இருந்தது.

ஆனால், அந்த அறிக்கையில் பெண் பத்திரிகையாளர் பிரச்சனை குறித்தோ, ரசிகர்களுக்கு நேரடியாக ஒரு எச்சரிக்கையோ இல்லாமல் இருந்தது. ‘பெண்கள்’ மீது விமர்சனம் வேண்டாம் என்பதுதான் முக்கியமாக இருந்தது. ரசிகர்களின் செயலுக்கு விஜய் வருத்தம் தெரிவிப்பது என்பதெல்லாம் அதில் இல்லை.

சரியாக பத்து நாட்கள் கழித்து அஜித் அவருடைய ரசிகர்களுக்காக நேற்று 19ம் தேதி அவரது சட்ட ஆலோசகர் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில்,

“எனது கட்சிக்காரருக்கு, அதிகாரப்பூர்வ வலைப்பக்கமோ, கைப்பிடியோ (Handle) எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும், குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் இல்லை என்பதை தெரிவிக்கிறார். ஆயினும் சில தனிப்பட்ட அங்கீகாரம் இல்லாத சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துகளை எனது கட்சிக்காரரின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். இதற்கு அவர்கள் எனது கட்சிக்காரரின் பெயரையும் புகைப்படத்தையும் அவரின் அனுமதியில்லாமல், அங்கீகாரமில்லாமல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் எனது கட்சிக்காரர் சார்ந்த திரைத்துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், பல தனி நபர்களையும், பொது மக்களையும் கூட தகாத முறையில் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது எனது கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்படிப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் என் கட்சிக்காரர் தன் மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்,” என்ற வாக்கியங்கள் இருக்கின்றன.

அதன் மூலம் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் தவறுகளுக்காக அஜித் அவருடைய மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் அறிக்கையும், அஜித் அறிக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அஜித் அவர் சொல்ல வருவதை மிகவும் வெளிப்படையாக, ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறது.

ஆனால், விஜய் அறிக்கையில் ஒரு மேலோட்டமான பார்வை மட்டுமே உள்ளது. ஒரு வேளை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தவறிழைத்து வந்தால், அவரும் அஜித் போன்று ஒரு கடுமையான அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

விஜய், அஜித் இருவரும் அறிக்கைகள் வெளியிட்ட பிறகாவது சமூக வலைத்தளங்களில் சண்டைகள் குறையும் என நம்புவோமாக.

Read Previous

விவேகம், இன்டர்நேஷனல் தமிழ்ப் படம் – விவேக் ஓபராய்

Read Next

‘மெர்சல்’னா மிரட்டலா இருக்கணும் – விஜய்